செய்திகள்

மடுகரையில் சாலையில் படுத்து தூங்கிய தொழிலாளி மினி வேன் மோதி பலி

Published On 2019-05-13 10:20 GMT   |   Update On 2019-05-13 10:20 GMT
மடுகரையில் சாலையில் படுத்து தூங்கிய தொழிலாளி மினி வேன் மோதி இறந்து போனார்.

பாகூர்:

நெட்டப்பாக்கம் அருகே மடுகரை வாணியர் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 50). கூலித்தொழிலாளி. இவருக்கு அமுதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை செல்வம் மடுகரை ஏரிக்கரை பகுதியில் உள்ள சாராயக்கடை அருகே சாலையோரம் படுத்து தூங்கினார்.

அப்போது சூரமங்கலத்தை சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டி வந்த மினி வேன் எதிர்பாராதவிதமாக செல்வம் மீது மோதியது. இதில், மினி வேன் சக்கரம் செல்வம் உடல் மீது ஏறி இறங்கியது.

படுகாயம் அடைந்த செல்வத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே செல்வம் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து செல்வத்தின் மனைவி அமுதா கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமு, உதவி சப்-இன்ஸ்பெக்டர் புவனேஷ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விபத்து நடந்த அதே இடத்தில் மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி இறந்து போனார். அதன் விவரம் வருமாறு:-

மடுகரை வாணியர் தெருவை சேர்ந்தவர் வேங்கடபதி. இவரது மனைவி ஞானாம்பாள் (60). இவர், சம்பவத்தன்று மடுகரை ஏரிக்கரையில் சாலையோரம் அமர்ந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக ஞானாம்பாள் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட ஞானாம்பாள் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்து போனார்.

இந்த விபத்து குறித்தும் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News