செய்திகள்
கோப்புப்படம்

நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் திமுக வழக்கு போட்டு தடுக்கிறது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Published On 2019-05-11 10:38 GMT   |   Update On 2019-05-11 10:38 GMT
அ.தி.மு.க. அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் தி.மு.க. வழக்கு போட்டு தடுத்து வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
விருதுநகர்:

ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக மோகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடந்த 15 நாட்களுக்கு மேலாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

சொக்கநாதபுரம், மகாராஜபுரம், ஒட்டநத்தம், வடமலாபுரம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா வழியில் நல்லாட்சி நடத்தி வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் ஏழை மக்களுக்காக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

ஒட்டப்பிடாரம் தொகுதியில் நாங்கள் பிரசாரம் செய்யும் இடமெல்லாம் வெயிலையும் பொருட்படுத்தாமல் இரட்டை இலை சின்னத்தை காட்டி உற்சாகப்படுத்தி வரவேற்கின்றனர். அவர்களது உற்சாகம் அ.தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துகிறது.

வேட்பாளர் மோகன் உங்களுக்காக ஓடோடி உழைக்கக்கூடியவர். அவரை நீங்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஒட்டப்பிடாரம் தொகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் 106 கோடி ரூபாய் செலவில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. திட்டப்பணிகள் முடிந்ததும் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் கிடைக்கும்.

அ.தி.மு.க. அரசின் திட்டங்களை தி.மு.க. வழக்கு போட்டு தடுத்து வருகிறது. தி.மு.க.வுக்கு ஏழைகளை பற்றிய சிந்தனையே இல்லை. தி.மு.க.வில் கருணாநிதி குடும்பத்தினரே உயர் பதவியில் இருக்க முடியும்.

மேற்கண்டவாறு அவர் பேசினார்.

அமைச்சர்களுடன் சந்திர பிரபா எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் சென்று வாக்கு சேகரித்தனர்.
Tags:    

Similar News