செய்திகள்

அ.தி.மு.க.வினர் பாண்டவர்கள்: எங்களுக்கு சூழ்ச்சி எதுவும் தெரியாது - அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2019-05-04 00:58 IST   |   Update On 2019-05-04 00:58:00 IST
அ.தி.மு.க.வினர் பாண்டவர்கள் என்பதால் எங்களுக்கு சூழ்ச்சி எதுவும் தெரியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #ADMK #MinisterJayakumar
ஆலந்தூர்:

அமைச்சர் ஜெயக்குமார், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒரு கொள்கை, லட்சியம் கொண்டவர்களிடம் முரண்பாடு இருக்காது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கொள்கை வழியில் நடப்பதால் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எந்த முரண்பாடும் கிடையாது. ஆனால் சிலர் கட்சிக்கும், ஆட்சிக்கும் முழுமையான அளவு விமர்சனங்களை வைக்கும்போது நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

கொறடா அளித்த புகாரின்பேரில் சபாநாயகர் நடவடிக்கை எடுத்து உள்ளார். கோர்ட்டுக்கு செல்ல மாட்டோம் என்று கூறிவிட்டு இப்போது கோர்ட்டுக்கு சென்று உள்ளனர்.

அ.ம.மு.க., தி.மு.க. இடையே குழப்பம் உள்ளது. ஆனால் எங்களை பொறுத்தவரை எந்தவித குழப்பமும் கிடையாது. அ.தி.மு.க., அரசு, இரட்டை இலை, தொண்டர்கள் இதுதான் எங்களின் ஒரே நிலையாக உள்ளது.

தி.மு.க. சகுனி, சூழ்ச்சி வேலை செய்வது வழக்கம். அ.தி.மு.க.வினர் பாண்டவர்கள் என்பதால் எங்களுக்கு சூழ்ச்சி எதுவும் தெரியாது. அ.ம.மு.க. துரியோதனன். தற்போது துரியோதனன் கும்பலும், சகுனி கும்பலும் சேர்ந்து உள்ளனர். இவர்களால் பாண்டவர்கள் கும்பலை ஒன்றும் செய்ய முடியாது. பாண்டவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்.

வேலூரில் கைப்பற்றப்பட்ட பணத்தை தன்னுடையதுதான் என்பதை நிரூபிக்க முடியுமா? என்று துரைமுருகன் கேட்டு உள்ளார். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையே இல்லை. குப்புற விழுந்து விட்டு மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக உள்ளது. அந்த பணம் துரைமுருகனுக்கு சொந்தமானதுதான்.

23-ந்தேதிக்கு பிறகு அ.ம.மு.க., தி.மு.க. நினைத்தது நடக்காது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்று மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.#ADMK #MinisterJayakumar

Similar News