செய்திகள்

நடிகர் கமல் தத்தெடுத்த கிராமத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மறியல்

Published On 2019-04-28 10:04 GMT   |   Update On 2019-04-28 10:04 GMT
மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தத்தெடுத்த கிராமத்தில் மின்தடையை கண்டித்தும், குடிநீர் விநியோகம் செய்யக்கோரியும் பெண்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். #Kamalhassan
திருவள்ளூர்:

திருவள்ளூர் அருகே உள்ளது அதிகத்தூர் கிராமம். இந்த கிராமத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தத்தெடுத்து உள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் திடீர் மின்தடை ஏற்பட்டு வந்தது. மேலும் இந்திராநகர் பகுதியில் குடிநீரும் சரிவர வினியோகிக்கப்படவில்லை.

இதேபோல் அடிக்கடி அதிக மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் உள்ள டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதன பொருட்களும் சேதம் அடைந்து வந்தன.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கிடையே நேற்று இரவு தொடர்ந்து மின்தடை ஏற்பட்டது. இதனால் புழுக்கத்தில் மக்கள் தவித்தனர்.

மின்தடையை கண்டித்தும், குடிநீர் விநியோகம் செய்யக்கோரியும் அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் இன்று காலை மேல்நல்லாத்தூர்- அகரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

குடிநீர் கிடைக்கவும், மின் தடையை சரி செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “இப்பகுதிக்கு 3 ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகிக்கப்படுகிறது. ஊராட்சி செயலர் சரிவர தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதில்லை.

இதுபற்றி கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் பலன் இல்லை. குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். அறிவிக்கப்படாத மின் தடையாலும் பாதிக்கப்பட்டு உள்ளோம். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி நடிகர் கமல்ஹாசனுக்கும் தெரியப்படுத்த உள்ளோம்” என்றனர். #Kamalhassan
Tags:    

Similar News