செய்திகள்

சிறுமிக்கு பாலியல் கொடுமை- தப்பி ஓடிய பெண்-காதலனை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

Published On 2019-04-26 15:13 IST   |   Update On 2019-04-26 15:13:00 IST
உத்திரமேரூர் அருகே வீட்டு வேலைக்கு அழைத்து சென்று சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த பெண்-காதலனை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. #girlmolestation

காஞ்சீபுரம்:

உத்திரமேரூர் அருகே உள்ள மானாம்பதி கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவர் அதே பகுதியை சேர்ந்த தம்பதியிடம் 16 வயது மகளை வீட்டு வேலைக்காக அழைத்து சென்றார்.

கடந்த வாரம் சிறுமி வீட்டிற்கு வந்த போது வேளாங்கண்ணியும், அவரது காதலன் அற்புதராஜும் தன்னை சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் கொடுமை செய்ததாக பெற்றோரிடம் கூறினார்.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து காஞ்சீபுரம் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானியிடம் புகார் அளித்தனர்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புகார் பற்றி அறிந்ததும் வேளாங்கண்ணியும், அவரது காதலன் அற்புதராஜும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடிக்க டி.எஸ்.பி.மனோகரன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சிறுமியை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய போது அவர்கள் அதனை வீடியோவாகவும் பதிவு செய்து உள்ளனர். இதனை வைத்தே சிறுமியை மிரட்டி தொடர்ந்து பலருக்கு பாலியலுக்காக அனுப்பி உள்ளனர்.

இதில் வேளாங்கண்ணி, அற்புதராஜுடன் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்கள் கும்பலாக இதேபோல் பலரை வேலைக்கு அழைத்து சென்று பாலியலில் ஈடுபடுத்தி இருக்கலாம் என்று தெரிகிறது.

இது தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய வேளாங்கண்ணி, அற்புதராஜ் சிக்கினால்தான் இந்த விவகாரத்தில் மேலும் பல விவரங்கள் வெளியாகும். #girlmolestation

Tags:    

Similar News