செய்திகள்

வன்முறைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் - எச்.ராஜா கோரிக்கை

Published On 2019-04-20 15:32 IST   |   Update On 2019-04-20 15:32:00 IST
வன்முறைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார். #HRaja
சென்னை:

பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒரு சமுதாயத்தைப் பற்றியும் குறிப்பாக அந்த சமுதாய பெண்களை மிக கேவலமாக இழிவுபடுத்தியும் சில தீய சக்திகள் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெகு வேகமாக பரவி வருகின்றது.

ஒரு குறிப்பிட்ட நலிந்த சமுதாயத்துக்கு எதிராக சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில், வாட்ஸ்-அப் பதிவில் மிகவும் அவதூறாகவும் கொச்சையாகவும் பேசிய அந்த சமூக விரோதிகள் மீது காவல் துறை மிகக்கடுமையான நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும்.

48 மணி நேரம் கடந்த பின்பும் சம்பந்தப்பட்ட, இந்தக் கீழ்த்தரமான செயலில் ஈடுபட்ட அந்த சமூக விரோதிகள் காவல் துறையினரால் கைது செய்யப்படாதது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது.

இந்தக் கீழ்த்தரமான ஆடியோவால் உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்ட அந்த சமுதாய மக்களின் இதயங்களுக்கு நாம் அனைவரும் ஆதரவளிப்பது தற்போது மிக முக்கியமான ஒன்று.

இந்த சமுதாய மக்களின் அமைதியான சட்டபூர்வமான போராட்டங்களுக்கு நம்முடைய ஆதரவு எப்பொழுதும் உண்டு. அனைவரும் இந்த சமூக விரோதிகளின் சூழ்ச்சியை உணர்ந்து, நம் மக்கள் அறவழியில் போராட வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக அரசும், தமிழக காவல்துறையும் இந்த மக்களுக்கு ஏற்பட்ட மன ரீதியான காயத்திற்கு மருந்திடும் வகையில் இந்த சமூக விரோதிகள் மீது விரைவான உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சமூக விரோதிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #HRaja

Tags:    

Similar News