செய்திகள்

பறக்கும் படையினரை பார்த்ததும் ரூ.13 லட்சத்தை ரோட்டில் வீசி விட்டு தப்பிய அரசியல் கட்சியினர்

Published On 2019-04-16 11:24 GMT   |   Update On 2019-04-16 11:24 GMT
பொதுமக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்து கொண்டிருந்த அரசியல் கட்சியினர் பறக்கும் படையினரை பார்த்ததும் ரூ.13 லட்சத்தை ரோட்டில் வீசி சென்றனர்.
சென்னை:

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பன்னீர்செல்வம் நகரில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக ஆம்பூர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. பறக்கும் படையினர் அப்பகுதிக்கு சென்றனர். அப்போது 2 பேர் தங்கள் கையில் வைத்து இருந்த பையை கீழே போட்டு விட்டு தப்பி ஓடினர்.

அந்த பையை கைப்பற்றி பார்த்தபோது அதில் ரூ.13 லட்சத்து 60 ஆயிரம் இருப்பது தெரிய வந்தது. ரூ.13.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் கிடைத்ததை தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் ஆம்பூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் ஆம்பூர் பகுதியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். பணத்தை நடுரோட்டில் போட்டுவிட்டு ஓடியவர்கள் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள தச்சூர் என்ற கிராமத்தில் உள்ள பொது மக்களுக்கு இன்று காலை ஓட்டுக்கு பணம் கொடுக்கபடுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது அந்த பகுதியில் அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் தங்களது கட்சிக்கு வாக்களிக்க கோரி அங்கிருந்த பொது மக்களுக்கு பணம் கொடுத்து கொண்டு இருந்தனர்.

பறக்கும் படை அதிகாரிகளை பார்த்ததும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கையில் வைத்திருந்த 1 லட்சத்து 17 ஆயிரத்து 800 ரூபாயை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

உடனே பறக்கும் படை அதிகாரிகள் அவர்களை விரட்டி சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
Tags:    

Similar News