செய்திகள்

மேலூர் அருகே வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து - 15 பேர் படுகாயம்

Published On 2019-03-30 10:13 GMT   |   Update On 2019-03-30 10:13 GMT
மேலூர் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலூர்:

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 20 பேர் கொல்லிமலைக்கு வேனில் சுற்றுலா சென்றனர். இன்று அதிகாலை அவர்கள் அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டனர். வேனை சிங்கம்புணரி அருகே உள்ள காளாப்பூரை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் ஓட்டி வந்தார்.

இன்று காலை 9 மணியளவில் வேன் மேலூர் 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டயர் வெடித்ததால் வேன் தாறுமாறாக ஓடி ரோட்டில் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. வேனில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர்.

உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேனில் சிக்கியவர்களை மீட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, தனிப்பிரிவு ஏட்டு சுரேஷ் மற்றும் போலீசாரும், டோல்கேட் விபத்து வாகன மீட்பு பிரிவு அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினரும் விரைந்து வந்து விபத்தில் காயமடைந்த பெண்கள் உள்பட 15 பேரை மேலூர், சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News