செய்திகள்

சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை உறுதி - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

Published On 2019-03-29 06:54 GMT   |   Update On 2019-03-29 06:54 GMT
சென்னையைச் சேர்ந்த பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. #SC #SaravanaBhavan #PRajagopal
சென்னை:

சென்னையைச் சேர்ந்த பிரின்ஸ் சாந்தகுமார் என்பவர் 2001-ம் ஆண்டு கொடைக்கானலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலும் மற்றும் சிலரும் கைது செய்யப்பட்டனர்.

ராஜகோபாலின் நிறுவனத்தில் ஜீவஜோதி என்ற பெண் வேலை பார்த்து வந்தார். அவரது கணவர் தான் பிரின்ஸ் சாந்தகுமார். ஜீவஜோதியை அடைவதற்காக அவரது கணவரை கொன்றதாக ராஜகோபால் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த கொலை வழக்கு விசாரணை கீழ் கோர்ட்டில் நடந்து வந்தது. 2004-ம் ஆண்டு கோர்ட்டு ராஜகோபாலுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.

தண்டனையை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். அப்போது ஐகோர்ட்டு இந்த தண்டனையை மாற்றி ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராஜகோபால் அப்பீல் செய்தார். இதன் விசாரணை நீண்ட காலமாக நடந்து வந்தது. இதற்கிடையே உடல் நிலையை காரணம் காட்டி ராஜகோபால் ஜாமீன் பெற்று வெளியே இருந்தார்.



அப்பீல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. ஐகோர்ட்டு அளித்த ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.

இதன் மூலம் அவர் ஆயுள் தண்டனையை அனுபவிக்க ஜெயிலில் அடைக்கப்படுவார். அவரை ஜூலை 7-ந்தேதி கோர்ட்டில் ஆஜராகும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அன்று ஆஜரானதும் அவர் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்.  #SC #SaravanaBhavan #PRajagopal

Tags:    

Similar News