செய்திகள்

வந்தவாசி அருகே வாகன சோதனையில் ரூ.1.11 லட்சம் பறிமுதல்

Published On 2019-03-26 10:33 GMT   |   Update On 2019-03-26 10:33 GMT
வந்தவாசி அடுத்த எட்டிதாங்கல், தெள்ளார் கிராமங்களில் பைனாஸ் ஊழியர், செல்போன் டவர் பராமரிப்பாளரிடம் இருந்து ரூ.1.11 லட்சம் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் பறிமுதல் செய்தனர். #LSPolls
வந்தவாசி:

ஆரணி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வந்தவாசி சட்டமன்ற தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலர் பாஸ்கரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், ஏட்டுக்கள் பாபு, கோமதி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று வந்தவாசி சேத்துபட்டு நெடுஞ்சாலை எட்டிதாங்கல் கிராமம் அருகே வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது வந்தவாசியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி சென்ற பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணம் இல்லாமல் வந்தவாசியை சேர்ந்த பைனாஸ் ஊழியர் பழனிசாமி என்பவர் ரூ.56 ஆயிரம் எடுத்து வந்ததை பறிமுதல் செய்தனர்.

பறக்கும் படை தேர்தல் அலுவலர் அற்புதம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் உள்ளிட்ட குழுவை சேர்ந்தவர்கள் தெள்ளாரில் நேற்று மாலை வாகன சோதனை செய்தனர்.

அப்போது ஜீப்பில் திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி நோக்கி வந்த சென்னையை சேர்ந்த செல்போன் டவர் பராமரிப்பு பணி ஒப்பந்ததார் எத்திராஜ் என்பவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் ரூ. 55 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.11 லட்சத்தை வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் இருந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் லாவண்யாவிடம் ஒப்படைத்தனர்.

இதனை ஆய்வு செய்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வந்தவாசி கருவூலத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து தாசில்தார் அரிக்குமார் கருவூலத்தில் ஒப்படைத்தார். #LSPolls

Tags:    

Similar News