செய்திகள்

தமிழகம் முழுவதும் கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் - கலெக்டர்களுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2019-03-26 03:32 GMT   |   Update On 2019-03-26 03:32 GMT
தமிழகம் முழுவதும் கொடி கம்பங்களை அகற்றி விட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #MadrasHC
சென்னை:

சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘கோடிக்கணக்கான ரூபாய் செலவில் மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்படும் சாலைகளை தோண்டி அரசியல் கட்சியினர் கொடி கம்பங்களை நடுகின்றனர். இது, தமிழ்நாடு பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும். கொடி கம்பங்கள் நடுவதற்காக சாலைகள் தோண்டப்படுவதை கட்டுப்படுத்துவதற்கு எந்த ஒரு விதிமுறையும் இல்லை. கொடி கம்பங்கள் நடுவதால் அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. எனவே, பொது இடங்களில் கட்சி கொடி கம்பங்களை அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்றி அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் மணிக் குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது 21 மாவட்டங்களில் ஊரக பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 58,172 கொடி கம்பங்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள 799 கொடி கம்பங்களை அப்புறப்படுத்த ஊரக வளர்ச்சித்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து ஆகியவற்றில் கொடி கம்பங்களை அகற்றியது குறித்து 21 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (மாவட்ட கலெக்டர்கள்) தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்துள்ளதாக தேர்தல் கமிஷன் தரப்பில் ஆஜரான வக்கீல் தெரிவித்தார்.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் சென்னை உள்பட மீதமுள்ள 11 மாவட்டங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்றி ஏப்ரல் 1-ந் தேதி அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர். #MadrasHC

Tags:    

Similar News