செய்திகள்

ரவுடி பினு கூட்டாளிகளுடன் கைது - 256 ரவுடிகளுக்கு போலீஸ் ‘குறி’

Published On 2019-03-19 13:30 IST   |   Update On 2019-03-19 13:30:00 IST
ஜாமீனில் வந்த ரவுடி பினு, அவனது கூட்டாளிகளை கைது செய்த போலீசார் சென்னையில் 256 ரவுடிகளை கைது செய்ய குறி வைத்துள்ளனர். #ParliamentElection #RowdyBinu
சென்னை:

பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுப்பதற்காக போலீசார் ரவுடிகளை வேட்டையாடி கைது செய்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் தலைமறைவாக உள்ள ரவுடிகளை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் சென்னை எழும்பூரில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பிரபல ரவுடி பினு கைது செய்யப்பட்டான். தனது பிறந்தநாளை கூட்டாளிகளுடன் சேர்ந்து அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடி பரபரப்பை ஏற்படுத்திய பினுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதன்பிறகு ஜாமீனில் வந்த பினு நேற்று போலீசாரிடம் சிக்கினான். அவனது கூட்டாளிகள் அக்பர், மனோஜ்குமார் ஆகியோரும் பிடிபட்டனர்.

பினுவை போன்று சென்னையில் 256 ரவுடிகளுக்கு போலீசார் குறி வைத்துள்ளனர். கொலை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடைய பிரபலமான ரவுடிகளும் இதில் அடங்குவர். போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து தப்பி ஓடி தலைமறைவாக உள்ள இந்த ரவுடிகள் அனைவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்காக தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்திலும் ரவுடிகள் அரசியல் கட்சிகளில் சேருவது தொடர் கதையாகி உள்ளது. குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் சமீபகாலமாக அரசியல் கட்சிகளில் இணைந்து செயல்படுவது வாடிக்கையான ஒன்றாகி உள்ளது.

ரவுடிகள் பலர் முக்கிய கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இப்படி தங்களை பாதுகாப்பதற்காக அரசியல் கட்சிகளில் தஞ்சம் புகுந்து முக்கிய பொறுப்புகளில் அங்கம் வகித்த ரவுடிகள் கொலை செய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.

குறிப்பிட்ட அரசியல் கட்சியில் மாவட்ட செயலாளர்களாக இருந்த 2 ரவுடிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டனர். கொடுங்கையூரிலும் இதே போன்று ரவுடி கொலை செய்யப்பட்டுள்ளார். #ParliamentElection #RowdyBinu

Tags:    

Similar News