செய்திகள்

பொள்ளாச்சி சம்பவத்துக்கு கண்டனம் - நெல்லை சித்த மருத்துவ கல்லூரி மாணவ- மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்

Published On 2019-03-18 12:08 GMT   |   Update On 2019-03-18 12:08 GMT
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நெல்லை சித்த மருத்துவ கல்லூரி மாணவ- மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #PollachiCase
நெல்லை:

பொள்ளாச்சியில் மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நெல்லையில் இன்று அரசு சித்த மருத்துவக்கல்லூரி மற்றும் பேட்டை ம.தி.தா. இந்துக்கல்லூரி மாணவ- மாணவிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் வழக்கம் போல் வகுப்பிற்கு வந்த மாணவ- மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்தனர். பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து கோ‌ஷம் எழுப்பியவாறு கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். போராட்டத்தில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.

இன்று மதியம் வரை இந்த உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரியில் இன்று காலை மாணவ-மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்தனர். இந்திய மாணவர் சங்க மாநகர செயலாளர் சிவா தலைமையில் பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து கோ‌ஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றார்கள்.

நெல்லை கோர்ட்டில் இன்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டார்கள். பொள்ளாச்சி சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்கள். இதனால் கோர்ட்டில் பணிகள் பாதிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து கோர்ட்டு முன்பாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் சங்க செயலாளர் செந்தில் குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மந்திர மூர்த்தி முன்னிலை வகித்தார்.

இதில் வக்கீல்கள் சுதர்சன், கந்தசாமி, ரமேஷ், துரை, மீனாட்சி சுந்தரம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். #PollachiCasse
Tags:    

Similar News