ஆத்தூரில் பொதுமக்கள் மறியல்- போக்குவரத்து பாதிப்பு
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட 19-வது வார்டு பகுதியில் 15 நாட்கள் மேலாகியும் குடிநீர் வழங்காததை கண்டித்தும் சாக்கடை மற்றும் சரியாக கவனிக்கப்படாத கண்டிக்கும் பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் ஆத்தூர் சென்னை பிரதான சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் இந்த சாலை மறியல் நடைபெற்றது.
இதனால் சேலம்-சென்னை செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பல முறை நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுடன் புகார் கூறியும் எந்த பயனும் இல்லை குப்பை சுத்தம் செய்வதில்லை குடிநீர் 15 நாட்களுக்கு மேலாகி வழங்கப்படவில்லை சாக்கடை சுத்தம் செய்யாமல் குழந்தைகளுக்கு காய்ச்சல் வாந்திபேதி ஏற்படுகிறது. இதனால் பொருக்க முடியாமல் சாலை மறியல் செய்கிறோம் என்றனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு ஆத்தூர் போலீசார் மற்றும் நகராட்சி பணியாளர்கள் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக இதற்கான தீர்வு காணப்படும் என உறுதியளித்ததின் பேரில் பெண்கள் சாலை மறியலை கைவிட்டனர்.