செய்திகள்

நிலத்தடி நீர் திருட்டை தடுக்ககோரி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

Published On 2019-03-11 09:41 GMT   |   Update On 2019-03-11 09:41 GMT
மாதவரம் அருகே நிலத்தடி நீர் திருட்டை தடுக்ககோரி மாநகராட்சி மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாதவரம்:

மாதவரம், கண்ணம்பாளையம். விளங்காடுபாக்கம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைத்து டேங்கர் லாரிகள் மூலம் நிலத்தடி நீர் சட்டவிரோதமாக விற்கப்பட்டு வருகிறது.

இதனால் இப்பகுதிகளில் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. இப்பகுதியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து நிலத்தடி நீரை திருடி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

எனினும் தினந்தோறும் 50-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் மூலம் நிலத்தடி நீர் திருடி விற்கப்படும் சம்பவம் நீடித்து வருகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மாதவரம் 3-வது மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாதவரம் போலீசார் விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இது குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்து உடனடியாக தண்ணீர் திருட்டை நிறுத்த ஏற்பாடு செய்கிறோம் என்று உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். #tamilnews

Tags:    

Similar News