சென்னையில் போதை பொருள் கடத்தலில் மேலும் 2 பேர் கைது
சென்னை:
மும்பை விமான நிலையத்தில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மலேசியாவுக்கு 39 கிலோ கேட்டமைன் என்ற போதை பொருள் கடத்த முயற்சி செய்யப்பட்டபோது அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.4 கோடி ஆகும்.
இதுகுறித்து மும்பை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்த போதை பொருள் கடத்தலில் சென்னையை சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மும்பை சுங்கத்துறை உதவி ஆணையர் மல்லிகார்ஜுன் தலைமையிலான அதிகாரிகள் சென்னை வந்து விசாரணை நடத்தினர்.
இதில் போதை பொருள் கடத்தலில் தொடர்புடைய பெரம்பூரை சேர்ந்த ஜெய்னுதீன் என்பவரை பாரிமுனையில் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய புழலை சேர்ந்த நூருதீன், சாந்தோமை சேர்ந்த சலீம் ஆகிய 2 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களை சென்னையில் இருந்து மும்பைக்கு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.
மும்பை சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சென்னை சுங்கத்துறை, கலால்துறை, சென்னை மாநகர போலீசார் ஆகியோர் உதவி செய்தனர்.