செய்திகள்

அரசு ஆஸ்பத்திரிகளில் கைவரிசை - டாக்டர்களிடம் லேப்-டாப், செல்போன் திருடிய வாலிபர் கைது

Published On 2019-02-26 09:57 GMT   |   Update On 2019-02-26 09:57 GMT
அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்களிடம் லேப்-டாப், செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர்:

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிபவர் மன்னர் மன்னன்.

நேற்று முன்தினம் டாக்டர் மன்னர்மன்னன் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அறையில் தனது பையை வைத்து இருந்தார். ஒரு ஆபரே‌ஷனை முடித்து விட்டு அறைக்கு திரும்பினார்.

அப்போது, லேப்-டாப் வைத்திருந்த அவருடையை பை, செல்போன், ஆகியவற்றை யாரோ திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பூக்கடை புறநகர் போலீஸ் நிலையத்தில் டாக்டர் மன்னர் மன்னன் புகார் செய்தார். இஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்தார்.

இதையடுத்து, உதவி கமி‌ஷனர் லட்சுமணன், மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று டாக்டரிடம் திருடிய வாலிபர் போலீசாரிடம் சிக்கினார். அவருடைய பெயர் விமல்பாபு (39). விசாரணையில் இவர், கே.எம்.சி., ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிகளிலும் டாக்டர்களிடம் திருடியது தெரியவந்தது.

அவரிடம் இருந்து 3 லேப்-டாப், 2 டேப்லட், 20 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட விமல்பாபு புழல் ஜெயலில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News