செய்திகள்

மேலப்பாளையத்தில் வக்கீல் காரை கடத்திய 2 பேர் கைது

Published On 2019-02-13 11:55 GMT   |   Update On 2019-02-13 11:55 GMT
மேலப்பாளையத்தில் வக்கீல் காரை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகிறார்கள்.

நெல்லை:

நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் தமீம் என்ற சாகுல் அமீது. இவர் தற்போது மதுரையில் தங்கி இருந்து கொடுக்கல்- வாங்கல் தொழில் செய்து வருகிறார்.

இவரை மதுரை பாண்டி கோவில் தாய் மூகாம்பிகை நகரை சேர்ந்த வக்கீல் புலிகேசி (வயது 55) என்பவர் தொடர்பு கொண்டு ரூ.10 கோடி கடன் கேட்டுள்ளார். அதற்கு தேவையான ஆவணங்களை தருவதாகவும் கூறிஉள்ளார். ஆனால் சாகுல் அமீது தன்னிடம் ரூ.10 கோடி இல்லை.

மேலப்பாளையத்தை சேர்ந்த ஒருவரிடம் அந்த தொகையை வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் புலிகேசி, சாகுல் அமீது ஆகிய 2 பேரும் மேலப்பாளையத்துக்கு வந்துள்ளனர். அங்குள்ள நேரு நகரில் ஒரு வீட்டில் இருந்த போது 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது.

அவர்கள், தங்களிடம் சாகுல் அமீது ரூ.17 லட்சத்தை மோசடி செய்து விட்டார் என்று கூறி, அவரை தாக்கி உள்ளனர். பின்னர் அவர் தர வேண்டிய ரூ.17 லட்சத்துக்கு பதிலாக, புலிகேசியின் காரை தருமாறு பறித்துக் கொண்டனர்.

பின்னர் அந்த காரில் புலிகேசியை அழைத்துச் சென்று நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு காரை திருடிச் சென்று விட்டனர். தங்களுடன் சாகுல் அமீதை அழைத்துச் சென்று விட்டனர்.

இதுகுறித்து புலிகேசி மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் தென்காசியை சேர்ந்த சேக்முகமது என்பவரிடம் அந்த கார் இருப்பதை அறிந்தனர். இதையடுத்து தென்காசி போலீசாரின் உதவியுடன் அந்த கார் மீட்கப்பட்டது.

இது தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்காசி ஷேக் முகமதுவை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த முகமது அசன்(28) என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் செல்வம், பாண்டி, துரைப்பான்டி உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News