செய்திகள்

நாகர்கோவில், ஓசூர் மாநகராட்சியாக மாற்றம் - சட்டசபையில் மசோதா தாக்கல்

Published On 2019-02-13 09:42 GMT   |   Update On 2019-02-13 09:42 GMT
ஓசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதற்கான சட்டமசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. #TNAssembly
சென்னை:

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள் உள்ளன. இந்நிலையில் ஓசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதற்கான சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலு மணி தாக்கல் செய்த சட்டமசோதாவில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து இருந்தார்.

இந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் கோவை மாநகராட்சி சட்டத்தின் வரைமுறைகளை தழுவி ஒரு சிறப்பு சட்டத்தை இயற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதன்படி மாநகராட்சியாக நாகர்கோவில் செயல்படும்போது நகராட்சி மன்றத்தால் விதிக்கப்பட்டு வந்த அனைத்து வரிகள், கட்டணங்கள், தீர்வைகள் இந்த சட்டத்தின் கீழ் வந்து முறைப்படி மாநகராட்சியால் விதிக்கப்பட்டதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இதேபோல் ஓசூர் நகராட்சியை மாநகராட்சி ஆக்குவதற்கும் சட்டமசோதாவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ஓசூர் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஓசூர் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்து இருந்தார்.

அந்த அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் கோவை மாநகராட்சி சட்டத்தை தழுவி ஒரு சிறப்பு சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழ்நாட்டில் மாநகராட்சியின் எண்ணிக்கை 14 ஆக உயர்கிறது. மாநகரட்சிகள் விவரம் வருமாறு:-

1. சென்னை
2. மதுரை
3. கோவை
4. சேலம்
5. நெல்லை
6. வேலூர்
7. திருச்சி
8. தூத்துக்குடி
9. ஈரோடு
10. தஞ்சாவூர்
11. திருப்பூர்
12. திண்டுக்கல்
13. நாகர்கோவில்
14. ஓசூர் #TNAssembly

Tags:    

Similar News