செய்திகள்

தமிழக அரசின் ரூ.2,000 நிதியுதவி திட்டம் - ராமதாஸ் வரவேற்பு

Published On 2019-02-12 03:21 GMT   |   Update On 2019-02-12 03:21 GMT
தமிழக அரசு அறிவித்துள்ள ஏழைகளுக்கு ரூ.2,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை டாக்டர் ராமதாஸ் வரவேற்று உள்ளார். #Ramadoss #PMK
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கஜா புயலாலும், வறட்சியாலும் பாதிக்கப்பட்டுள்ள 60 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒருமுறை சிறப்பு நிதியுதவியாக ரூ.2,000 வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் வரவேற்கத்தக்கதாகும்.

விவசாயத் தொழிலாளர்களில் தொடங்கி அனைத்துத் தொழிலாளர்களுக்கும் இந்த உதவி வழங்கப்படும். நகர்ப்புறங்களில் வாழும் ஏழைகளுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட இருக்கிறது. அரசின் இந்த நிதியுதவி சரியான நேரத்தில் வழங்கப்படும் மிகத் தேவையான உதவியாகும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள 7 மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளில் வறட்சி நிலவுவதால் அங்கும் இதே நிலை தான் நிலவுகிறது.

மேலும், சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு 103 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அவர்களுக்கு மாற்று வேலைக்கு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. பொதுவாக இத்தகைய பாதிப்புகளின் தாக்கம் மற்ற துறைகளையும் பாதித்திருக்கிறது. எனவே, பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு ஏதேனும் உதவி வழங்கப்பட வேண்டியது அரசின் கடமையாகும். அந்த வகையில் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ரூ.2,000 நிதியுதவி ஏழைக்குடும்பங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

அதேநேரத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வறுமை என்பது இப்போது மட்டுமே நிகழும் ஒன்றல்ல. அவர்களை வறுமையிலிருந்து நிரந்தரமாக மீட்க வேண்டும் என்பதற்காகத் தான் வறுமைக்கோட்டுக்கும் கீழ் வாழும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ரூ.2,500 வழங்கும் வகையில் அடிப்படை வருமானத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று கடந்த 6-ந்தேதி பா.ம.க. வெளியிட்ட நிழல் பட்ஜெட்டில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

அடிப்படை வருமானத் திட்டம் என்பது தமிழகத்திற்கு மிகவும் தேவையான திட்டம் ஆகும். அதற்கான தொடக்கமாக முதல்-அமைச்சர் இப்போது அறிவித்துள்ள ரூ.2,000 நிதியுதவித் திட்டத்தை நீட்டித்து, ஏழை குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் இந்த நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்தால் அது தமிழ்நாட்டின் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் மிக முக்கிய மைல்கல்லாக அமையும்; இந்தியாவுக்கே முன்னோடி திட்டமாக திகழும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Ramadoss #PMK
Tags:    

Similar News