செய்திகள்

விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள்- கலெக்டர் அறிவிப்பு

Published On 2019-02-06 11:51 GMT   |   Update On 2019-02-06 11:51 GMT
விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்கப்படும் என்று கலெக்டர் சிவஞானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில், வேளாண்மையை எந்திர மயமாக்கும் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் நலன் சார்ந்த பல்வேறு சிறப்பான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

வேளாண்மைக் கருவிகளும், எந்திரங்களும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், சிறு, குறு ஆதி திராவிட பழங்குடி மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரையும் இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் வரையும் அல்லது அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச மானியத் தொகை இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது.

விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் எந்திரங்கள் மற்றும் கருவிகளை வேளாண் பொறியியல் துறையால் ஒப்புதல் மற்றும் அங்கீகாரம் வழங்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து தங்களின் முழு விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து மானிய உதவியுடன் வாங்கி பயனடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் வேளாண்மை வளர்ச்சித் திட்டம் மற்றும் வேளாண்மை எந்திரமயமாக்கலின் உப இயக்கம் திட்டங்களின் கீழ் டிராக்டர், பவர் டில்லர், சுழற்கலப்பை, தட்டை வெட்டும் கருவி, விசைத் தெளிப்பான், நேரடி நெல் விதைப்புக் கருவி, விசை களையெடுக்கும் எந்திரங்கள் போன்ற வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் தற்போது வரை விருதுநகர் மாவட்டத்தில் 1080 பயனாளிகளுக்கு ரூ.783.71 லட்சம் மானிய விலையில் இத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் கருவிகளை பெறுவதற்கு தங்களது விண்ணப்பத்தினை www.agrimachinery.nic.in என்ற இணைய தளத்தின் வாயிலாகவும், உழவன் செயலியின் வாயிலாகவும் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட செயற் பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) அலுவலகம் மற்றும் உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) அலுவலகத்தையும், விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி வட்டார விவசாயிகள் 04562 - 252192 என்ற தொலைபேசி எண்ணிலும், சாத்தூர், சிவகாசி, வெம்பக் கோட்டை, வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வட்டார விவசாயிகள் 04563-289290 என்ற தொலை பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News