செய்திகள்

சிலைகள் திருட்டு வழக்கில் கைது - திருப்பராய்த்துறை கோவில் செயல் அலுவலர் சிறையில் அடைப்பு

Published On 2019-02-06 09:58 GMT   |   Update On 2019-02-06 09:58 GMT
சிலைகள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட திருப்பராய்த்துறை கோவில் செயல் அலுவலர் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சி:

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் திருப்பராய்த்துறையில் தாருகாவனேசுவரர் கோவில் உள்ளது. 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த வைகாசி விசாக திருவிழாவின் போது, போகசக்தி அம்மன், சண்டிகேசுவரர் ஆகிய சிலைகள் திருட்டு போனது.

இதுகுறித்து ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், போலீசார் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது பல ஆண்டுகளுக்கு முன்பே அங்கிருந்த அங்காளம்மன் சிலையும் திருட்டு போனது தெரியவந்தது. இந்த 3 சிலைகள் திருட்டு குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் ஜீயபுரத்தில் உள்ள தாருகாவனேசுவரர் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவிலில் அப்போதைய செயல் அலுவலராக இருந்த ஆனந்தகுமார் ராவ், கணக்கர் கண்ணன், மாலை கட்டும் வேலை செய்து வந்த ராமநாதன் ஆகியோர் சேர்ந்து சிலைகளை திருடி விற்றது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே ராமநாதன் கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி முன்னாள் ஊழியரான கணக்கர் கண்ணனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முன்னாள் கோவில் செயல் அலுவலரான ஆனந்தகுமார்ராவ் கடந்த 7 மாதங்களாக தலைமறைவாக இருந்தார். அவர் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவும் ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆனந்தகுமார் ராவை (வயது 45) நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை, கும்பகோணம் கூடுதல் முதன்மை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி வருகிற 19-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஆனந்தகுமார் ராவை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனிடையே திருடப்பட்ட சிலைகளை யாருக்கு விற்றனர்? வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டதா? இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக ஆனந்த்குமார் ராவை காவலில் எடுத்து விசாரிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். #tamilnews
Tags:    

Similar News