செய்திகள்

வடபழனியில் டிராவல்ஸ் நிறுவனம் மீது ரூ.20 லட்சம் மோசடி புகார்

Published On 2019-02-05 10:35 GMT   |   Update On 2019-02-05 10:35 GMT
சென்னை வடபழனியில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனம் ரூ.20 லட்சம் ஏமாற்றியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
போரூர்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மரியதாசன். இவர் வடபழனி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோகிலாவிடம் புகார் மனு கொடுத்தார். அதில், கூறியிருப்பதாவது:-

நான் மற்றும் எனது நண்பர்கள் ஜெருசலேம் சுற்றுலா செல்வதற்காக வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அணுகினோம்.

அப்போது விமான டிக்கெட், விசா தங்குமிடம் சேர்த்து ஒரு நபருக்கு ரூ.1 லட்சத்து 10ஆயிரம் கட்டணம் என்றனர். ஜனவரி மாதம் 7-ந் தேதி சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்வதாகவும் கூறி இருந்தனர்.

இதையடுத்து 5 தவணையாக ரூ. 20 லட்சத்து 50ஆயிரம் பணத்தை ஆன்லைன் மூலம் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பினேன். ஆனால் இதுவரை சுற்றுலா செல்ல எந்தவித ஏற்பாடும் செய்யவில்லை.

மேலும் பணத்தை திருப்பி கேட்டால் மிரட்டல் விடுக்கின்றனர். எனவே டிராவல்ஸ் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News