செய்திகள்

ஜெயலலிதா மரணம் விசாரணை: ஓ.பன்னீர்செல்வம் 1-ந்தேதி ஆஜராகிறார்

Published On 2019-01-30 06:15 GMT   |   Update On 2019-01-30 06:15 GMT
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் வருகிற 1-ந்தேதி ஆஜராகி சாட்சியம் அளிக்கிறார். #OPS #JayaDeathProbe
சென்னை:

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் கமி‌ஷன் விசாரணை நடத்தி வருகிறது.

அப்பல்லோ ஆஸ்பத்திரி, எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் என பல்வேறு தரப்பினருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கிய நிலையில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் சிலருக்கு ஆணையம் சம்மன் அனுப்பியது. இதை ஏற்று ஓ.பன்னீர் செல்வம் வருகிற 1-ந்தேதி ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்கிறார்.

ஏற்கனவே அவர் 2 முறை ஆஜராக முடிவு செய்த தேதி கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது. இப்போது 1-ந்தேதி ஆஜராக முடிவு செய்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் விசாரணையில் ஓ.பன்னீர் செல்வம் சாட்சியம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஓ.பன்னீர்செல்வம், முதல்- அமைச்சர் ஆனார்.


ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பதவி விலகிய ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும். இதற்காக தர்ம யுத்தத்தில் ஈடுபட்டுள்ளேன் என்று கூறி வந்தார். அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு முக்கிய நிபந்தனையாக இந்த கோரிக்கையை வைத்தார். இதைத்தொடர்ந்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில் விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் முதல் முறையாக சாட்சியம் அளிப்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச்செல்லாதது ஏன்? பார்வையாளர்களை அனுமதிக்க மறுத்தது யார்? என்பன உள்பட பல திடுக்கிடும் தகவல்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விசாரணை ஆணையத்தில் சாட்சியம் அளிப்பவர்களிடம் சசிகலா வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்து வருகிறார். அதுபோல் ஓ.பன்னீர்செல்வத்திடமும் அவர் குறுக்கு விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார். #OPS #JayaDeathProbe
Tags:    

Similar News