செய்திகள்

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி முறையாக பராமரிக்கப்படுகிறது - தமிழக அரசு விளக்கம்

Published On 2019-01-30 00:39 GMT   |   Update On 2019-01-30 00:39 GMT
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி முறையாக பராமரிக்கப்படுகிறது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. #GovernmentStaff #Teacher #PensionScheme #TNGovernment
சென்னை:

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி முறையாக பராமரிக்கப்படுகிறது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி பராமரிப்பு பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில் அது பற்றிய உண்மை நிலையை விளக்க வேண்டியது அவசியமாகிறது.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை 2003-ல் நடைமுறைக்கு கொண்டுவந்த பின்பு, அத்திட்டப்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, அதற்கு ஈடாக 10 சதவீதம் தொகையை அரசு வழங்கி வருகிறது. இத்திட்டப்படி இந்தத் தொகைகளை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை நிறுவனத்துக்கு மாற்றம் செய்ய முடிவெடுக்காத நிலையில் இந்த நிதி தனி பொதுக்கணக்கில் இருப்பு வைத்து பராமரிக்கப்படுகிறது.

இந்த நிதி அவ்வப்போது மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் கருவூல பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது. சேமநல வைப்பு நிதி வட்டி வீதத்தின்படி வட்டியைக் கணக்கிட்டு, அத்தொகைக்கும் கருவூல பத்திரங்களில் கிடைக்கும் வட்டிக்கும் உள்ள வித்தியாசத் தொகையை மாநில அரசே பொறுப்பேற்று அதை கருவூல பத்திர முதலீட்டில் கிடைக்கும் வட்டியுடன் இந்த பொதுக் கணக்கு நிதியில் சேர்க்கப்படுகிறது.

அந்தவகையில் அரசு 2017-18-ம் ஆண்டு வரை ரூ.2,115.47 கோடி கூடுதல் வட்டியை வழங்கியுள்ளது. இந்த நிதியில் உரியவாறு ஆண்டுதோறும் பிடித்தம் செய்யப்படும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புத் தொகை, அதற்கு ஈடான அரசின் பங்களிப்புத் தொகை மற்றும் அதற்கான வட்டித் தொகை முறையாக சேர்க்கப்படுகிறதா? என மத்திய கணக்கு ஆய்வாளரால் சரிபார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை இந்த நிதியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு ரூ.8,283.97 கோடியுடன் அரசின் பங்களிப்பாகப் பெறப்பட்ட ரூ.8,283.97 கோடியும், பெறப்பட்ட வட்டியாக ரூ.5,252.90 கோடியும் பொதுக்கணக்கில் இருப்பு வைக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்படுகிறது.

நடப்பு ஆண்டிலும் பெறப்படும் பங்களிப்புத் தொகை முறையாக வரவு வைக்கப்படுவதுடன் ஆண்டின் இறுதியில் அதற்கான வட்டியும் கணக்கிடப்பட்டு அதுவும் இந்த பொதுக் கணக்கு நிதியில் சேர்க்கப்படும். ஒவ்வொரு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியரின் கணக்கிலும் அவர்களின் பங்களிப்புத் தொகை எவ்வளவு?, அரசு அதற்கு ஈடாகச் செலுத்திய தொகை எவ்வளவு?, சேர்ந்துள்ள வட்டித் தொகை எவ்வளவு? என்பதை முறையாக அரசு தகவல் தொகுப்பு விவர மையம் மூலம் கணக்கிட்டு கணக்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன் விவரத்தை சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் http://cps.tn.gov.in/pub-l-ic இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதி தனி பொதுக்கணக்கு வட்டியுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே பிடித்தம் செய்யப்பட்ட நிதி முறையாக பராமரிக்கப்படுவதுடன் அதற்கான வட்டி, சேமநல நிதிக்கு தற்போது கிடைக்கும் வட்டி அளவான 8 சதவீதம் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டு சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News