செய்திகள்

இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்க வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்

Published On 2019-01-29 17:07 GMT   |   Update On 2019-01-29 17:07 GMT
மானாமதுரை அருகே பயிர் இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
மானாமதுரை:

மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. கடந்த 2017–ம் ஆண்டிற்குரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படாததால் விவசாயிகள் பல்வேறு பேராட்டங்களை நடத்தி வந்தனர். இதையடுத்து மாவட்ட கூட்டுறவு வங்கி மூலம் அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்கில் இழப்பீட்டு தொகை வரவு வைக்கப்பட்டது. அதில் ஏக்கருக்கு 12 ஆயிரம் ரூபாய் முதல் 28 ஆயிரம் ரூபாய் வரை பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏற்றவாறு வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து விவசாயிகள் கிராமங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பணம் பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் சில கிராமப்புற கூட்டுறவு வங்கி செயலாளர்கள் இழப்பீட்டு தொகையை விவசாயிகளிடம் தெரிவிக்காமல் மானாமதுரை கூட்டுறவு வங்கிக்கு வரவழைத்தனராம்.

தொடர்ந்து அவர்கள் மானாமதுரை அருகே உள்ள சூரக்குளம், கல்குறிச்சி உள்ளிட்ட கிராம மக்களை மானாமதுரை கூட்டுறவு வங்கிக்கு வரவழைத்து அலைக்கழித்தனராம். இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது, விவசாயிகளை வங்கிக்குள் அனுமதிக்காமல் வெளியே தள்ளி கதவை பூட்டிவிட்டனர். இதனால் பலரும் வங்கி வாசலில் காத்துகிடந்தனர். கொளுத்தும் வெயிலில் பலரும் வங்கியில் பணம் எடுக்க காலை எட்டு மணி முதல் மதியம் ஒரு மணி வரை காத்துகிடந்தனர்.

மதியத்திற்கு மேல் விவசாயிகள் ஒவ்வொருவராக வரவழைத்து பணம் வழங்கினர். மேலும் கிராமப்புற கூட்டுறவு வங்கி செயலாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கினால் மட்டுமே இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இழப்பீட்டு தொகையை முழுமையாக கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம் என்றனர். #tamilnews
Tags:    

Similar News