செய்திகள்

தவளக்குப்பத்தில் மீனவர் கொலையில் டிரைவர் கைது

Published On 2019-01-29 09:27 GMT   |   Update On 2019-01-29 09:27 GMT
தவளக்குப்பத்தில் மதுக்கடை தகராறில் ஏற்பட்ட மீனவர் கொலையில் வாலிபர் சிக்கினார்.

பாகூர்:

தவளக்குப்பம் அருகே தமிழக பகுதியான நல்லவாடு கிராமத்தை சேர்ந்தவர் முத்தாள்ராயன் (வயது 46). மீனவர்.

நேற்று மாலை இவர் அதே பகுதியை சேர்ந்த தரணி என்பவருடன் தவளக்குப்பம்- அபிஷேகப்பாக்கம் மெயின் ரோட்டில் உள்ள மதுக்கடைக்கு மது குடிக்க வந்தனர். அங்கு மது குடித்து விட்டு அருகில் உள்ள பெட்டிக்கடைக்கு சென்றனர். அப்போது அங்கு நின்ற ஒரு வாலிபருக்கும், இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்கிக்கொண்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து முத்தாள்ராயனை சரமாரியாக தாக்கினார். இதில் முத்தாள்ராயன் ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்தார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த தவளக்குப்பம் போலீசார் விரைந்து வந்து முத்தாள்ராயனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முத்தாள்ராயன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து தவளக்குப்பம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து முத்தாள்ராயனை கல்லால் அடித்து கொன்ற வாலிபரை தேடி வந்தனர்.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த முத்தாள்ராயனின் உறவினர்கள் மற்றும் நல்லவாடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சம்பவம் நடந்த மதுகடைக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கொலையாளியை கைது செய்ய கோரி புதுவை- கடலூர் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். கொலையாளியை கண்டறிந்து உடனடியாக கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர். மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்துவதாக கூறினர்.

இதனை ஏற்று முத்தாள்ராயனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் முத்தாள்ராயனை கல்லால் அடித்து கொன்றது அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்த டிரைவர் மணி என்பது போலீசாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முத்தாள்ராயனை கொலை செய்தது ஏன் என்பது குறித்து மணி பரபரப்பு தகவல்களை கூறினார். அவர் கூறியதாவது:-

மதுக்கடை அருகே பெட்டிக்கடை நடத்தி வருபவர் எனது உறவினர் ஆவார். அந்த கடையில் முத்தாள்ராயன் தின்பண்டம் வாங்கி விட்டு 2 ரூபாய் கடன் வைத்திருந்தார்.

நேற்று மாலை முத்தாள்ராயனிடம் எனது உறவினர் அந்த பணத்தை கேட்டபோது முத்தாள்ராயனும், அவருடன் வந்த தரணியும் எனது உறவினரிடம் தகராறு செய்தனர்.

இதனை நான் தட்டிக்கேட்டபோது அவர்கள் 2 பேரும் சேர்ந்து என்னை தாக்கினர். நான் அவர்களிடம் இருந்து பயந்து ஓடிய போது என்னை விரட்டி விட்டு கல்லால் தாக்கினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த நான் செங்கல்லை எடுத்து முத்தாள்ராயனை திருப்பி தாக்கினேன். இதில் ரத்த வெள்ளத்தில் முத்தாள்ராயன் மயங்கி சாய்ந்ததும் நான் தப்பி ஒடிவிட்டேன். ஆனால், கொலை செய்யும் எண்ணத்தில் தாக்கவில்லை.

இவ்வாறு மணி போலீசாரிடம் தெரிவித்தார்.

Tags:    

Similar News