செய்திகள்

ஆசிரியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் மாணவிகள் போராட்டம்

Published On 2019-01-28 11:09 GMT   |   Update On 2019-01-28 11:09 GMT
உளுந்தூர்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு படித்து வரும் மாணவிகள் ஆசிரியர்களுக்கு ஆதரவாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உளுந்தூர்பேட்டை:

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு படித்து வரும் மாணவிகள் ஆசிரியர்களுக்கு ஆதரவாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பள்ளியில் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். 50-க்கும் மேற்பட்ட ஆசிரிய- ஆசிரியைகள் பாடம் கற்பித்து வருகிறார்கள். ஆசிரியர்களின் போராட்டத்தால் இந்த பள்ளிக்கு ஒருசில ஆசிரிய-ஆசிரியைகள் மட்டுமே வந்து சென்றனர்.

இன்று அந்த பள்ளியில் மாதிரி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இன்று காலை வழக்கம்போல் மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களது வகுப்பறைகளுக்கு செல்லாமல் பள்ளிவாசல் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. எங்கள் பள்ளிக்கு புதிதாக ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது. ஏற்கனவே பணியாற்றி வரும் ஆசிரியர்களே வரவேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரிய- ஆசிரியைகளுக்கு ஆதரவாக கோ‌ஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்.

இதனால் மாணவிகள் அனைவரும் இன்று நடக்க இருந்த மாதிரி தேர்வை புறக்கணித்தனர்.

போராட்டம் நடத்திய மாணவிகளிடம் பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியை மற்றும் பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

மாணவிகள் போராட்டம் நடத்துவது பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட கல்வி அலுவலர் ரத்தினசெல்வி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். 

Tags:    

Similar News