செய்திகள்

தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்- கமல்ஹாசன்

Published On 2019-01-17 10:01 GMT   |   Update On 2019-01-17 10:01 GMT
தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி முன்னேற்றப்பாதைக்கு அழைத்து செல்லவேண்டும் என்று கமல்ஹாசன் பேசினார். #KamalHaasan
பொள்ளாச்சி:

பொள்ளாச்சியை அடுத்துள்ள புரவிப்பாளையத்தில் சமத்துவ பொங்கல் விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார்.

இதில் கலந்து கொள்ள நடுப்புணி சாலையில் இருந்து விழா நடைபெற்ற இடம் வரை ரேக்ளா மாட்டு வண்டியில் வந்தார்.

அங்கு நடைபெற்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். பின்னர் புரவிப்பாளையம் பொது மக்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடினார்.

பானை பொங்கியபோது பெண்கள் குலவையிட்டு மகிழ்ந்தனர். அதன் பின்னர் அங்கு வரிசையாக அமர்ந்திருந்த பொது மக்களுக்கு பொங்கல் பரிமாறி அவர்களுடன் அமர்ந்து பொங்கல் சாப்பிட்டார்.

விழாவில் அவர் பேசும் போது, தமிழை பயிற்றுவிப்பது ஆசிரியர்களாக இருந்தாலும் தமிழ் பேசி வாழ வைப்பது தமிழக மக்கள் தான். பறை, உருமிமேளம் ஆகியவை எனது உறவினர் போன்றது. அடுத்த பொங்கலின் போது தமிழகத்தில் மாற்றம் வரும் என்றார்.

முன்னதாக பொள்ளாச்சியில் நடைபெற்ற சான்றோன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று 12 பேருக்கு விருது வழங்கினார். விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:-

இந்த சான்றோன் விருது கட்சி பொறுப்பாளர்கள் முன் வழங்கப்படுகிறது. இது எதற்காக என்றால், விருது பெற்ற அனைவருமே தன்னலம் இன்றி பல துறைகளில் சேவை புரிந்தவர்கள்.

எங்கள் கட்சியை சேர்ந்தவர்களும் தன்னலம் இன்றி நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் விருது பெற்றவர்களைப்போலவே பாடுபடவேண்டும் என்பதற்காகத்தான். எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் போராளிகளாக இருக்கவேண்டும். கத்தியின்றி, ரத்தமின்றி நாட்டுக்காக உழைக்கும் போராளிகளாக இருக்க வேண்டும்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் சுருதிஹாசன், அக்‌ஷராஹாசன் ஆகியோர் வாரிசுகளாக அரசியலுக்கு வரமாட்டார்கள். பெயர் தெரியாதவர்கள்தான் கட்சியின் பொறுப்பில் வரவேண்டும் என நினைக்கிறேன்.

சாதனை என்பது சொல் அல்ல செயல். மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடி தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் பறக்கவேண்டும். நமது கட்சியை குறுக்கு வழியில் கொண்டு செல்லமாட்டேன்.

மக்கள் நீதி மய்யம் என்ற மரத்தை தொண்டர்கள் வளர்க்கவேண்டும். அணிலாக நாம் இவ்வளவு நாள் இருந்துவிட்டோம். வில் எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் உள்ளதால் தொண்டர்கள் சிறப்பாக பணியாற்றவேண்டும். தமிழகத்தில் சிறு, குறு தொழில் தொடங்க இளைஞர்கள் முன்வரவேண்டும்.

அண்டை மாநிலங்களை விட தமிழகம் பின்தங்கி உள்ளது. ஆகவே தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி முன்னேற்றப்பாதைக்கு அழைத்து செல்லவேண்டும் .

இவ்வாறு அவர் பேசினார். #KamalHaasan
Tags:    

Similar News