செய்திகள்

எதிர்கால நிலத்தில் நல்லாட்சி விளையட்டும் - மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

Published On 2019-01-14 08:08 GMT   |   Update On 2019-01-14 08:08 GMT
எதிர்கால நிலத்தில் நல்லாட்சி விளையட்டும். அதற்கான விவசாயம், இந்நாளில் தொடங்கட்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Pongal #MKStalin
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து வருமாறு:-

எத்தனையோ விழாக்கள் உண்டு. அவை மதத்துக்கு மதம், சாதிக்கு சாதி, வட்டாரத்துக்கு வட்டாரம், ஊருக்கு ஊர் மாறுபடும். வேறுபடும். ஆனால், ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் இருக்கும் ஒரே விழா இதுதான். உயர்வு தாழ்வற்ற சமத்துவ விழா.

இலக்கியத்துக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் மண்ணுக்கும் இலக்கணம் வகுத்தவன் தமிழன். மண்ணும், மக்களுமானது தான் தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கை. உழவே நமது உயிர். மாடுகள் நமது செல்வங்கள். அதனால் தான் மண்ணைக் காப்பதற்கு நாம் போராடுகிறோம். ஜல்லிக்கட்டுக்காக போராடுகிறோம்.



கீழடியைக் காப்பாற்றப் போராடுகிறோம். மேகதாதுவை தடுக்கப் போராடுகிறோம். இந்தப் போராட்டங்களில் அரசியல் இல்லை; நம் வாழ்க்கை இருக்கிறது. தமிழர்களின் எதிர்காலம் இருக்கிறது. அதனால் தான் வாழ்க்கையையும், அதனோடு தொடர்புடைய விழாவையும் ஒருசேர வைத்தார்கள் நம் முன்னோர்கள்.

அத்தகைய உழவர் வாழ்க்கை இன்று உற்சாகமாக இல்லை. அனைத்துத் தரப்பு மக்களின் துன்ப துயரங்கள் கவலைகள் சொல்லி மாளாது. இதற்கு காரணமான அரசுகள் அதுபற்றிய கவலைகள் இல்லாமல் இருப்பதும் உண்மைதான்.

இவர்களை வாழ்த்தும் ஜனநாயகப் போர்க்களம் நம்மை விரைந்து அழைக்கிறது. அதற்கு முன்னதாக உற்சாகத்தை வழங்கும் விழாவாக பொங்கல் திருநாள் வருகிறது.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் பாராட்டிப் போற்றப்பட்ட தமிழ்நாட்டுப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொங்கல் திருவிழாவுடன் தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளையும் கொண்டாடிட, 1921-ம் ஆண்டு தமிழ் புலவர்கள் கூடி முடிவெடுத்ததை 2006, 2011 ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தியவர் கலைஞர். அதன்படி, தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

எதிர்கால நிலத்தில், நல்லாட்சி விளையட்டும். அதற்கான விவசாயம், இந்நாளில் தொடங்கட்டும்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Pongal  #MKStalin

Tags:    

Similar News