செய்திகள்

ஓட்டேரியில் டீக்கடைக்காரரை கொலை செய்ய கத்தியுடன் சென்ற வாலிபர்கள் போலீசில் சிக்கினர்

Published On 2019-01-13 15:41 IST   |   Update On 2019-01-13 15:41:00 IST
ஓட்டேரியில் டீக்கடைக்காரரை கொலை செய்ய கத்தியுடன் சென்ற வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பூர்:

செம்பியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் நேற்று இரவு பெரம்பூர் நெடுஞ்சாலையில் ரோந்து சென்றார். அப்போது 2 வாலிபர்கள் கையில் எதையோ மறைத்தப்படி நடந்து சென்று கொண்டிருந்ததை பார்த்தார். சந்தேகம் அடைந்து அவர்களை நிற்குமாறு கூறினார். உடனே 2 வாலிபர்களும் தப்பி ஓடினார்கள். போலீசார் விரட்டி சென்று அவர்களை மடக்கி பிடித்தனர். அப்போது வாலிபர் ஒருவர் கீழே விழுந்து கையில் காயம் அடைந்தார்.

அவர்கள் துணியில் 2 கத்திகளை மறைந்து வைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்த பிறகு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் வியாசர்பாடியை சேர்ந்த சரத், சுதாகர் என்பதும் ஓட்டேரியில் டீக்கடைக்காரர் ஒருவரை கொலை செய்ய சென்றதும் தெரியவந்தது.

நேற்று காலை சரத் ஓட்டேரியில் சசிகுமார் நடத்தும் டீக்கடையில் வடை சாப்பிட்டு உள்ளார். அப்போது அவருக்கும் டீ மாஸ்டருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் டீக்கடைக்காரர் சரத்தை திட்டி முகத்தில் சுடுதண்ணீரை ஊற்றி விடுவேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சரத் தனது நண்பர் சுதாகரிடம் கூறியுள்ளார். அதையடுத்து அவர்கள் டீக்கடைக்காரரை கொலை செய்ய முடிவு செய்து கத்தியுடன் சென்று உள்ளனர். அப்போது தான் ரோந்து போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.

இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News