செய்திகள்

பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள்

Published On 2019-01-10 23:26 IST   |   Update On 2019-01-10 23:26:00 IST
சிவகங்கையில் வட்டார அளவில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு, ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
சிவகங்கை:

சிவகங்கை புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அமைப்பு சார்பில் பெண் கல்வியின் முக்கியத்துவம், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வட்டார அளவில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடந்தன. 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஓவிய போட்டியும், 4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பேச்சுப் போட்டியும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளும், 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகளும் நடைபெற்றது.

இந்த போட்டிகளை சிவகங்கை வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொறுப்பு) கந்தவேல் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுத்தொகை காசோலைகளாக வழங்கப்பட்டது. இந்த காசோலை தொகையானது மாணவர்கள் வங்கிகளுக்கு சென்று காசோலைகளை எவ்வாறு கையாள்வது என்பதை அறிந்துகொள்ளும் விதமாக வழங்கப்பட்டது. இப்போட்டிகளில் வென்ற மாணவர்கள் அனைவரும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் கரோலின் நிஷி, ஆசிரியர்கள், பயிற்றுனர்கள் சதீஷ்குமார், காளிராசா, சித்திக், பாத்திமா, கவிதா உள்ளிட்டோர் செய்திருந்தனர். 
Tags:    

Similar News