செய்திகள்
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்.

மதுரை அருகே கிராமம் கிராமமாக சென்று பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சர்

Published On 2019-01-10 04:41 GMT   |   Update On 2019-01-10 04:41 GMT
திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கினார். #PongalGift #MinisterUdhayakumar
மதுரை:

தமிழக அரசு இந்த ஆண்டு பொங்கல் பரிசாக பொங்கல் பொருட்கள் தொகுப்புடன் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்று அறிவித்தது.

இந்த திட்டத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5-ந் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் தொடங்கி வைத்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட 12-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன் மற்றும் அதிகாரிகள் பொங்கல் பரிசு வழங்கினர்.

கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். பொதுமக்கள் திரண்டு வந்து பொங்கல் சிறப்பு தொகுப்பை பெற்றுக் கொண்டனர். இரவு 8 மணி வரை கிராம பகுதிகளில் பொதுமக்களுக்கு நேரில் சென்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொங்கல் பரிசை வழங்கினார்.


வறுமைக்கோட்டிற்கு மேலே உள்ளவர்களுக்கு ரூ.1000 ரொக்கம் வழங்க சென்னை ஐகோர்ட்டு தடை விதித்ததால் ரேசன் கடைகள் முன்பு நேற்று மதியத்தில் இருந்தே பொது மக்கள் பொங்கல் பரிசுக்காக காத்திருந்தனர். இதனால் பொங்கல் பரிசு வழங்குவதிலும் குழப்பம் ஏற்பட்டது.

இந்த நிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இரவு 8 மணி வரை கிராம மக்களுக்கு நேரில் சென்று பொங்கல் பரிசு வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை 8 மணியில் இருந்து குன்னத்தூர், புதூர், பெரியபூலாம்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊர்களில் சுமார் 12 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் ஆகியவற்றை வழங்கினார். #PongalGift #MinisterUdhayakumar
Tags:    

Similar News