செய்திகள்
மதுரை ரெயில் நிலையம் முன்பு மத்திய, மாநில அரசு ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

மதுரையில் ரெயில் நிலையம் முற்றுகை - அரசு ஊழியர்கள் 800 பேர் கைது

Published On 2019-01-09 09:52 GMT   |   Update On 2019-01-09 09:52 GMT
மதுரையில் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு நுழைய முயன்ற அரசு ஊழியர்கள் 800 பேரை போலீசார் கைது செய்தனர். #BharatBandh
மதுரை:

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது.

தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கக்கூடாது என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் நேற்றும், இன்றும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இதில் வருமான வரித்துறை, தபால் துறை, தொலை தொடர்புத்துறை உள்ளிட்ட மத்திய அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்கள் பங்கேற்று உள்ளனர்.

இதே போல் வங்கி, காப்பீடு நிறுவன ஊழியர்களும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் 2-வது நாளாக நடைபெற்ற வேலைநிறுத்தம் காரணமாக மத்திய அரசு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. வங்கிகள் செயல்படாததால் பொதுமக்களும், வியாபாரிகளும் சிரமம் அடைந்தனர்.

பல ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை முன்பு இன்று காலை தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட தொழிற்சங்கங்ள் சார்பில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் 800-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

அவர்கள் சாலையை மறித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். பின்னர் ரெயில் நிலையத்தை முற்றுகையிடுவதற்காக அவர்கள் பேரணியாக சென்றனர்.

தொழிலாளர்களின் முற்றுகையையொட்டி மதுரை ரெயில் நிலைய கிழக்கு நுழைவுவாயில் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் தடுப்புகளும் அமைக்கப்பட்டு இருந்தன.

பேரணியாக வந்தவர்களிடம் கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். இதையடுத்து போலீசார் தடுத்து நிறுத்தி பெண்கள் உள்பட 800-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

மதுரை கீழவெளி வீதியில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பெண்கள் உள்பட 50 பேர் கலந்து கொண்டனர்.

மதுரை ரெயில் நிலையத்தின் மேற்கு நுழைவுவாயில் முன்பு இன்று எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  #BharatBandh
Tags:    

Similar News