செய்திகள்

நீலகிரியில் உறைபனி தீவிரம் - வெப்பநிலை 0 டிகிரியாக குறைவு

Published On 2019-01-03 15:59 GMT   |   Update On 2019-01-03 15:59 GMT
நீலகிரி மாவட்டத்தில் உறைபனியின் தாக்கம் மிக அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு முடங்கியுள்ளனர்.
காந்தல்:

நீலகிரி மாவட்டத்தில் உறைபனி காலம் தொடங்கி விட்டது. மாவட்டம் முழுவதும் காஷ்மீர்போல் பனி படர்ந்து காட்சியளிக்கிறது. தலைக்குந்தா, கிளன்மார்கன், போர்வே, இத்தலார், போர்த்தி ஆகிய இடங்களில் உறைபனியின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.

நகர் பகுதியான ரேஸ்கோர்ஸ், கூடைப்பந்து மைதானம், அரசு தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களில் வெப்ப நிலை 6 டிகிரி செல்சியசாக பதிவானது. தலைகுந்தா, கிளன்மார்கன் ஆகிய இடங்களில் 0 டிகிரி செல்சியசாக வெப்பநிலை குறைந்தது.

வெப்பநிலை குறைவால் தண்ணீர் பனிக்கட்டியானது. இதனால் குடிநீர் குழாய்களில் தண்ணீர் வினியோகம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குழாய்களிலும் தண்ணீர் பனிக்கட்டியாக உறைந்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

டீசல் உறைந்ததால் வாகனங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் சாலைகளில் வாகனங்களை அதிகம் காணமுடியவில்லை. உறைபனியால் 1000 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட தேயிலைச் செடிகள், மலைக்காய் கறிச்செடிகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு முடங்கியுள்ளனர்.

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலங்களான படகு இல்லம், அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பனியின் தாக்கத்தால் பொதுமக்கள் காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகளால் அவதிப்பட்டனர். ரோட்டோரங்களில் பொதுமக்கள் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகிறார்கள். மாலை நேரங்களில் மக்கள் கூட்டமின்றி ஊட்டி நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது. #tamilnews
Tags:    

Similar News