செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்களை உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்க வேண்டும் - புதுக்கோட்டை கலெக்டர்

Published On 2019-01-03 14:58 GMT   |   Update On 2019-01-03 14:58 GMT
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் வீசாமல் உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்க வேண்டும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டை:

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் வீசாமல் உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்க வேண்டும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை அமலுக்கு வந்தது. இதையொட்டி தடை செய்யப்பட்ட, ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தகுந்த மாற்று பொருட்கள் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, உணவகங்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் மற்றும் பார் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்தப்பட்டன.

தமிழ்நாட்டில் உள்ள உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், வணிகர்கள், அனைத்து விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வைக்காமல், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் (நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி) ஒப்படைக்க வேண்டும்.
எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் தூக்கி எறியாமல் உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்க வேண்டும். அல்லது பதிவு செய்யப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்களிடம் வழங்க வேண்டும். இதன் மூலம் பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்ய தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு உருவாக அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #tamilnews
Tags:    

Similar News