செய்திகள்

கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.1,146 கோடி போதாது - அன்புமணி ராமதாஸ்

Published On 2018-12-31 22:03 GMT   |   Update On 2018-12-31 22:03 GMT
கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.1,146 கோடி போதாது என்றும், தமிழக அரசு கேட்ட முழுத்தொகையை வழங்கவேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். #GajaStorm #AnbuManiRamadoss
சென்னை:

பா.ம.க. இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘கஜா’ புயலால் ஒட்டுமொத்தமாக ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்த நிலையில், தமிழக அரசு மிகவும் குறைவாக ரூ.15 ஆயிரம் கோடி மட்டும் தான் இழப்பீடு கோரியது. ஆனால் அதைக்கூட முழுமையாக வழங்காமல் மத்திய உள்துறை அமைச்சகம் ரூ.1,146 கோடி மட்டும் வழங்கியது போதாது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது, இது யானை பசிக்கு சோளப்பொரி போடுவதைப் போல உள்ளது.

‘கஜா’ புயல் பாதிப்புக்காக மத்திய அரசு வழங்கியுள்ள நிதி, தமிழக அரசு கோரிய நிதியில் வெறும் 7.64 சதவீதம் மட்டும் தான். இயற்கை சீற்றங்களால் தமிழகம் பாதிக்கப்படும் போதெல்லாம் மத்திய அரசு வழங்கும் நிவாரண உதவி என்பது மிகக்குறைவாகவே உள்ளது. 2015-ம் ஆண்டு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக தமிழக அரசு ரூ.13 ஆயிரத்து 731 கோடி நிதி கோரியது. ஆனால், மத்திய அரசு வெறும் ரூ.1,940 கோடி மட்டுமே வழங்கியது. இது கேட்டதில் 15 சதவீதம் மட்டும் தான்.



2016-ம் ஆண்டு ‘வார்தா’ புயலுக்காக தமிழக அரசு ரூ.22 ஆயிரத்து 573 கோடி கோரியது. ஆனால் கிடைத்தது ரூ.266.17 கோடி மட்டும் தான். இது கிட்டத்தட்ட 1 சதவீதம் மட்டுமே. 2017-ம் ஆண்டு வறட்சிக்காக தமிழக அரசு கோரியது ரூ.39 ஆயிரத்து 565 கோடி. ஆனால், கிடைத்தது ரூ.1,748 கோடி தான். இது தமிழக அரசு கோரிய நிதியில் வெறும் 4 சதவீதம் மட்டும் தான். 2017-ம் ஆண்டு ‘ஒகி’ புயல் பாதிப்புகளுக்காக தமிழக அரசு கோரியது ரூ.9 ஆயிரத்து 300 கோடி. ஆனால் கிடைத்தது ரூ.133 கோடி மட்டும் தான். இது 1.5 சதவீத நிவாரண உதவி மட்டுமே.

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மத்திய குழுவினர், தமிழகம் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டிருப்பதாக தெரிவித்தனர். அவ்வாறு இருக்கும்போது அவர்கள் தமிழகத்துக்கு எவ்வளவு நிதி வழங்கவேண்டும் என்று பரிந்துரைத்தனர்? பரிந்துரை செய்த தொகையில் எத்தனை சதவீதத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது? என்பது தெரியவில்லை. ‘கஜா’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மிகவும் அதிகம். எனவே மத்திய அரசு, தமிழக அரசு கோரியதைப் போன்று ரூ.15 ஆயிரம் கோடி நிதி வழங்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #GajaStorm #AnbuManiRamadoss
Tags:    

Similar News