செய்திகள்

கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய விவகாரம்: ரத்தம் அளித்த இளைஞர் உயிரிழப்பு

Published On 2018-12-30 03:36 GMT   |   Update On 2018-12-30 05:10 GMT
சாத்தூர் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய விவகாரத்தில் ரத்தம் அளித்த இளைஞர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். #HIVBlood #PregnantWoman
மதுரை:

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் 23 வயது மனைவி 2-வது முறையாக கர்ப்பம் அடைந்தார். அவருக்கு ரத்த அணுக்கள் குறைவாக இருப்பதாக கூறி சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ரத்தம் செலுத்தப்பட்டது. அதன் பிறகு அந்த பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதுகுறித்து பரிசோதனை நடத்தியபோது கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்ட பிறகுதான் இந்த தொற்று பரவி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்தியபோது சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து பெறப்பட்ட ரத்தம் அந்த பெண்ணுக்கு செலுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரத்தம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபரிடம் தானமாக பெறப்பட்டது என தெரிய வந்தது.

இதுகுறித்து சுகாதாரத் துறையினரும், அரசு சார்பில் நியமிக்கப்பட்ட மருத்துவ குழுவும் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டு தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர் வளர்மதி, ஆலோசகர்கள் கணேஷ்குமார், ரமேஷ் ஆகியோர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

ரத்ததானம் செய்த வாலிபர் 2016-ம் ஆண்டு முதல் ரத்ததானம் செய்து வந்த நிலையில் எச்.ஐ.வி. தொற்றுபற்றி அவருக்கு யாரும் தெரிவிக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது உறவினருக்கு ரத்தம் தேவைப்பட்டதால் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அவர் ரத்தம் கொடுத்துள்ளார்.

அதன் பின்னர் வெளிநாடு செல்ல திட்டமிட்ட வாலிபர் அதற்காக மேலூரில் ரத்த பரிசோதனை செய்தபோது தான் அவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது பற்றி தெரியவந்தது. உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனை சென்ற வாலிபர் தான் வழங்கிய ரத்தத்தை உறவினருக்கு செலுத்த வேண்டாம் என்று கூறினார். ஆனால் உறவினருக்கு அந்த ரத்தம் செலுத்தப்படவில்லை என கூறிய ரத்த வங்கி ஊழியர்கள் அதனை சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு வழங்கி இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ரத்த தானம் வழங்கிய வாலிபர் கடந்த 26-ந்தேதி கமுதியில் மனவேதனையில் எலி மருந்து (வி‌ஷம்) குடித்து மயங்கினார். அவரை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கும் மனஉளைச்சலில் இருந்த அவர் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்தார். தனது உடலில் பொருத்தப்பட்டிருந்த மருத்துவ கருவிகளை பிடுங்கி எறிந்தார்.

இதனை தொடர்ந்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மனநல சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் இன்று அதிகாலை திடீரென ரத்த வாந்தி எடுத்தார். உடனடியாக அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை மேற் கொண்டனர். ஆனால் தொடர்ந்து ரத்த வாந்தி எடுத்த அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் சண்முகசுந்தரம் கூறுகையில், தற்கொலைக்கு முயன்ற வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் குற்ற உணர்வில் இருந்ததால் அதற்காக மனநல சிகிச்சையும் அளித்தோம். இந்தநிலையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு வாலிபர் திடீரென ரத்தவாந்தி எடுத்தார்.

அவருக்கு டாக்டர்கள் உடனடி சிகிச்சை அளித்தனர். ஒரு யூனிட் ரத்தமும், 3 யூனிட் ரத்த பிளாஸ்மாவும் ஏற்றப்பட்டது. ஆனால் அவரது உடல் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. காலை 8.10 மணிக்கு அவர் பரிதாபமாக இறந்தார்' என்றார்.

வாலிபர் இறந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடம் சோகத்தை ஏற்படுத்தியது. தனக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதை தானாக முன்வந்து தெரிவித்த நிலையிலும் பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டதால் அவர் மனவேதனையில் இருந்ததாகவும் அதுவே அவரை கொன்றுவிட்டதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தனர். #HIVBlood #PregnantWoman
Tags:    

Similar News