செய்திகள்

அடுத்த மாதம் மதுரை வருகிறார் பிரதமர் மோடி

Published On 2018-12-29 04:41 GMT   |   Update On 2018-12-29 04:41 GMT
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் மூன்றாவது வாரம் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். #MaduraiAIIMS #PMModi
மதுரை:

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை போன்று தமிழ்நாட்டிலும் அதிநவீன வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது.

இதற்காக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டன. இறுதியில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது.

மதுரை புறநகர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு உரிய அனைத்து வசதிகளும் இருப்பதால் மத்திய அரசும் அதை ஏற்றுக்கொண்டது. இதைத் தொடர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு மத்திய அரசு ரூ.1264 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்தது.

அடுத்த ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளன. மூன்று ஆண்டுகளுக்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

"அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம்" என்றழைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் செயல்பட தொடங்கினால் தென் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இத்தகைய சிறப்புடைய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் (ஜனவரி) மூன்றாவது வாரம் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட இருப்பதை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் உறுதி செய்தனர்.



ஆனால் ஜனவரி மூன்றாவது வாரத்தில் எந்த தேதியில் பிரதமர் மோடி மதுரை வருவார் என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. இது தொடர்பாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் தமிழக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு ஆலோசித்து வருகிறார்கள்.

அனேகமாக ஜனவரி 26 அல்லது 27-ந்தேதி பிரதமர் மோடி மதுரை வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மதுரை வரும் பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிறகு மதுரையில் கட்டப்பட்டுள்ள சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியை தொடங்கி வைக்க உள்ளார். இந்த சிறப்பு மருத்துவமனை ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

இதே போன்று திருநெல்வேலியிலும் மற்றொரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையையும் மதுரையில் நடக்கும் விழாவில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

மதுரை மருத்துவமனை நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு அன்றே பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தையும் தொடங்க உள்ளார். அன்றைய தினம் முதல் கட்டமாக அவர் சென்னை, வேலூர், கோவை நகரங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிலும், 3 நகரங்களில் நடக்கும் தேர்தல் பிரசார கூட்டங்களிலும் ஹெலிகாப்டரில் பயணம் செய்து பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அவரது பயணத் திட்ட விவரங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. #MaduraiAIIMS #PMModi
Tags:    

Similar News