செய்திகள்

வாணியம்பாடி அருகே சிறுத்தை தாக்கி 5 பேர் படுகாயம்

Published On 2018-12-27 07:30 GMT   |   Update On 2018-12-27 08:03 GMT
வாணியம்பாடி அருகே சிறுத்தை தாக்கி 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. #Leopard

வாணியம்பாடி:

வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் சிறுத்தைபுலி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் கூறி வந்தனர்.

நேற்று ஆம்பூர் அடுத்த அரங்கல் துருகம் பகுதியில் கன்றுகுட்டி, 2 ஆடுகளை சிறுத்தை கடித்து குதறியது.

இந்த நிலையில் இன்று காலை நாகலேரி வட்டம் சிக்கனாங்குப்பம் பகுதியை சேர்ந்த பாரதி (வயது 45). இவரது தங்கை அலுமேலு (42). ஆகிய 2 பேரும் மாடுகளுக்கு தீவனம் சேகரிப்பதற்காக ஏரிகரைக்கு சென்றனர்.

ஏரிக்கரை அருகே கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று திடீரென பாய்ந்து அலுமேலுவை கடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாரதி சிறுத்தையை விரட்டினார். அவரையும் கையில் கடித்தது. அப்போது அந்த வழியாக வந்த சந்தோஷ் என்பவரையும் சிறுத்தை கையில் கடித்தது.

 


இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து சிறுத்தையை விரட்டியடித்தனர். பொதுமக்களை கண்டதும் சிறுத்தை மீண்டும் அங்கிருந்த கரும்பு தோட்டத்திற்கு சென்று பதுங்கி கொண்டது.

படுகாயமடைந்த 3 பேரையும் மீட்ட பொது மக்கள் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாணியம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் உள்பட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலங்காயம் மற்றும் திருப்பத்தூர் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மயக்க ஊசி செலுத்தி கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சிறுத்தைபுலியை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் சிறுத்தை பதுங்கியுள்ள இடத்தில் திரண்டனர். கரும்பு தோட்டத்தின் ஒரு பகுதியில் தீ வைத்தனர். மேலும் சிறுத்தை நோக்கி கற்களை வீசினர். அப்போது கூட்டத்தில் புகுந்த சிறுத்தை அங்கு நின்றிருந்த 2 பேரை கடித்து குதறியது. இதில் கமல் என்பருக்கு வயிறு பகுதியிலும், சுப்பு என்பவருக்கு கையிலும் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  #Leopard

Tags:    

Similar News