செய்திகள்

எச்.ஐ.வி. ரத்தம் கைமாறியது எப்படி?

Published On 2018-12-27 06:26 GMT   |   Update On 2018-12-27 06:46 GMT
சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி மற்றும் மஞ்சள் காமாலை பாதிப்பு கலந்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் புதிய தகவல்கள் அம்பலமாகி வருகிறது.#HIVBlood #PregnantWoman
விருதுநகர்:

ரத்த தானம் செய்த கமுதியைச் சேர்ந்த வாலிபருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது 2016-ம் ஆண்டே கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவரை உரிய முறையில் மருத்துவத்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு அறிவுறுத்தவில்லை என்று தெரிய வந்து உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக அந்த வாலிபரும் தனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியாமலேயே இருந்துள்ளார். இந்த 2 ஆண்டுகளில் அவர் வேறு எப்போதாவது ரத்த தானம் செய்தாரா? என்பது தெரியவில்லை. இதுபற்றிய தகவல்களை மருத்துவ அதிகாரிகளால் உறுதி செய்ய இயலவில்லை.

அவர் வெளிநாடு செல்ல வேண்டும் என்பதற்காக ரத்த பரிசோதனை செய்த போது தான் அவருக்கே எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் ரத்தம் பரிசோதனை செய்த ரத்த வங்கி ஊழியர்களுக்கு முன்பே இதுபற்றி தெரிந்து இருந்தும் அலட்சியமாக நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இது தவிர சாத்தூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகளும் ரத்தம் செலுத்தும் வி‌ஷயத்தில் சற்று கவன குறைவாக இருந்தது தெரிய வந்துள்ளது. உண்மையில் முதல் தவறு எங்கு நடந்தது என்பதை அறிய தமிழக அரசு 6 பேர் கொண்ட குழுவை அமைத்து இருக்கிறது.



மருத்துவத்துறை கூடுதல் இயக்குனர் டாக்டர் எஸ். மாதவி தலைமையில் அமைக்கப்பட்ட அந்த குழுவில் மருத்துவ துறையைச் சேர்ந்த மேலும் 5பேர் இடம் பெற்று உள்ளனர். அவர்கள் இன்று விசாரணையை தொடங்கி உள்ளனர்.

ஒரு வாரத்துக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய அவர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ஓரிரு நாட்களில் இந்த குழு விசாரணையை முடித்து விடும் என்று தெரிகிறது.

அதன்பிறகு அந்த குழு பரிந்துரை செய்வதற்கு ஏற்ப தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #HIVBlood #PregnantWoman
Tags:    

Similar News