செய்திகள்

கம்பம் அருகே காரில் கஞ்சா கடத்திய கேரள வாலிபர்கள் கைது

Published On 2018-12-19 10:00 GMT   |   Update On 2018-12-19 10:00 GMT
கம்பம் அருகே காரில் கஞ்சா கடத்திய கேரள வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கூடலூர்:

தேனி மாவட்டத்தில் இருந்து கேரள பகுதிக்கு அதிகளவில் கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. அடிக்கடி அதிகாரிகள் கஞ்சா கடத்திச்செல்பவர்களை கைது செய்தபோதும் இது தொடர்கதையாகி வருகிறது.

அரசு பஸ், கூலித்தொழிலாளர்கள் மற்றும் கார் மூலம் மர்ம கும்பல் கஞ்சா கடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் குமுளி சோதனைச்சாவடியில் சுங்கத்துறை அதிகாரி சுனிராஜ் தலைமையில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கம்பத்தில் இருந்து எர்ணாகுளம் நோக்கி சென்ற காரை மறித்து சோதனையிட்டனர்.

கார் இருக்கையின் அடியில் சுமார் 1½ கிலோ கஞ்சா கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதனைதொடர்ந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த லியோதாஸ், கோகுல், சானவால், இருக்கான், நிகில் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். கார் மற்றும் கஞ்சாவையும் பறிமுதல் செய்து எங்கிருந்து கஞ்சாவை கடத்தி வந்தார்கள் என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பிடிபட்ட குமுளி சோதனைச்சாவடி அருகே தமிழகஎல்லையில் ஒரு சோதனைச்சாவடி உள்ளது. ஆனால் ஒருமுறை கூட இங்கு கஞ்சா கடத்தும் கும்பல் பிடிபட்டது இல்லை. பெரும்பாலும் கேரள அதிகாரிகளே கடத்தல் கும்பலை கைது செய்து வருகின்றனர்.

தமிழக அதிகாரிகள் அலட்சியமாகவே உள்ளதால் தமிழக பகுதியில் இருந்து எளிதாக ரேசன்அரிசி மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களை கடத்திச் செல்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி யுள்ளனர்.

Tags:    

Similar News