செய்திகள்

முதுமலையில் ஆக்ரோஷமாக சண்டையிட்ட காட்டுயானைகள் - சுற்றுலா பயணிகள் பீதி

Published On 2018-12-18 17:12 GMT   |   Update On 2018-12-18 17:12 GMT
முதுமலையில் 2 காட்டு யானைகள் ஆக்ரோஷமாக சண்டை போட்டதால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.
நீலகிரி:

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தை புலிகள் என வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. வனவிலங்குகளை கண்டு ரசிப்பதற்காக வனத்துறையினர் தங்களது வாகனங்களில் சுற்றுலா பயணிகளை வனத்துக்குள் காலை மற்றும் மாலை வேளைகளில் அழைத்து செல்கின்றனர். இதுதவிர கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மைசூரூ, பெங்களூருவுக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.

முதுமலை தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி வழியாக ஊட்டிக்கு செங்குத்தான மலைப்பாதை செல்கிறது.

இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் மசினகுடி மற்றும் கூடலூர் வழியாக ஊட்டிக்கு வந்து கொண்டிருந்தனர். இதேபோல் கூடலூரில் இருந்து மைசூருக்கு ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது கூடலூர் தொரப்பள்ளிக்கும் முதுமலை கார்குடிக்கும் இடையே சாலையோரம் 2 காட்டு யானைகள் வந்தன. திடீரென அவைகள் ஆக்ரோஷமாக ஒன்றுக்கொன்று முட்டி மோதியவாறு சண்டையிட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைக்கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.

காட்டு யானைகளுக்கு இடையே சண்டை தொடர்ந்து நீடித்ததால் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டன. ஏனெனில் எந்த நேரத்திலும் காட்டு யானைகள் சாலைக்கு வந்து விடும் என்ற அச்சத்தால் அந்த வழியாக சாலையை கடக்க டிரைவர்கள் முன்வர வில்லை. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக 2 யானைகளும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டன. பின்னர் ஒரு யானை பின்வாங்கியது.அதை மற்றொரு யானை பின்புறத்தில் முட்டியபடி தள்ளிக்கொண்டே வந்தது. இதனால் வெற்றி பெற்றதாக கருதிக்கொண்ட அந்த யானை, பின்னர் கோபம் தணிந்த நிலையில் வனத்துக்குள் சென்றது. பின்னர் சாலையில் வந்து நின்ற யானையும் சிறிது நேரத்தில் வனத்துக்குள் சென்றது. அதன் பின்னரே அந்த பகுதியில் வாகன போக்குவரத்து சீரடைந்தது. #tamilnews
Tags:    

Similar News