செய்திகள்

கும்மிடிபூண்டி அருகே மாயமான பள்ளி மாணவன் கடற்கரையில் பிணமாக மீட்பு

Published On 2018-12-17 10:21 GMT   |   Update On 2018-12-17 10:21 GMT
கும்மிடிபூண்டி அருகே மாயமான பள்ளி மாணவன் எண்ணூர் கடற்கரையில் பிணமாக கிடந்தான். நண்பர்களுடன் குளிக்கும் போது இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கும்மிடிபூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த பண்பாக்கம் கிராமத்தைச்சேர்ந்த ரவி என்பவரின் மகன் செல்வம் என்கிற சாமுவேல்(19). இவர் கும்மிடிப்பூண்டியில் உள்ள கே.எல்.கே. அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 13-ந்தேதி, பள்ளியில் நடைபெறும் தனி வகுப்பிற்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டுச்சென்ற செல்வம் வீடு திரும்பவில்லை. அன்றைய தினம் அவர் பள்ளிக்கு செல்லவில்லை.

அவரது நண்பர்களின் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித பலனும் இல்லை. மாணவர் செல்வம் மாயமானது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று எண்ணூர் கடற்பகுதியில் சுமார் 19 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரின் பிணம் கரை ஒதுங்கியது. எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் கும்மிடிப்பூண்டி அருகே காணாமல் போன பள்ளி மாணவர் செல்வம் என்பது தெரியவந்தது.

கடந்த 13-ந்தேதி நண்பர்களுடன் சென்னை விம்கோ நகரையொட்டி உள்ள கடற்கரைப் பகுதிக்கு சென்று செல்வம் குளித்து உள்ளார். அப்போது கடல் அலையில் சிக்கி மூழ்கி இருக்கிறார். ஆனால் அவரது நண்பர்கள், உறவினர்களிடம் எந்த தகவலும் தெரிவிக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News