செய்திகள்

சுரண்டை அருகே மதுக்கடையை அகற்றக்கோரி தாசில்தாரிடம் பொதுமக்கள் மனு

Published On 2018-12-14 16:04 GMT   |   Update On 2018-12-14 16:04 GMT
சுரண்டை அருகே மதுக்கடையை அகற்றக்கோரி பரங்குன்றாபுரம் பொதுமக்கள் தாசில்தாரிடம் அனு கொடுத்துள்ளனர்.
சுரண்டை:

சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரம் பொதுமக்கள் வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்று தாசில்தார் நல்லையாவிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பரங்குன்றாபுரத்திலிருந்து கலிங்கப்பட்டி செல்லும் ரோட்டில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இப்பகுதி, பெண்கள் பீடி கடைக்கு செல்கின்ற பகுதி என்பதால், கடையை உடனடியாக அகற்ற வேண்டி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று கடை மூடப்பட்டது. 

இந்நிலையில் பரங்குன்றாபுரத்திலிருந்து சுரண்டை வரும் ரோட்டில், மரியதாய்புரம் ரோடு பிரிகின்ற இடத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. நெல்லையிலிருந்து பரங்குன்றாபுரம், மரியதாய்புரம், லட்சுமிபுரம், அச்சம் குன்றம், கருவந்தா, குறிச்சான்பட்டி,  முதலான கிராமங்களுக்கு செல்கின்ற பொதுமக்கள் பரங்குன்றாபுரம் விலக்கில் இறங்கி நடந்து இப்பகுதிக்கு செல்லுகின்றனர். 

இந்நிலையில் பரங்குன்றாபுரம், மரியதாய்புரம் ரோடு பிரியக்கூடிய இடத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் இது பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறாக இருக்கும். நடந்து செல்லும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகும். எனவே கடையை நிரந்தரமாக அகற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதில் ம.தி.மு.க. மாவட்ட மகளிரணி செயலாளர் தேனம்மாள், சுதா, ராணி, மகேஸ்வரி, பாப்பா, ரீகன், அமிர்தராஜ், பொன்னுத்துரை, குமாரவேல் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News