செய்திகள்

போலி ஆவணம் கொடுத்து வங்கியில் ரூ.1 கோடி மோசடி- கைதான அண்ணன், தம்பி சிறையில் அடைப்பு

Published On 2018-12-12 12:25 GMT   |   Update On 2018-12-12 12:25 GMT
போலி ஆவணம் கொடுத்து வங்கியில் ரூ.1 கோடி மோசடி செய்த வழக்கில் கைதான சகோதர்களை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
திருப்பூர்:

ஈரோடு ரெயில்வே காலனியை சேர்ந்தவர் செந்தில்(வயது 58). இவருடைய தம்பி ரவிச்சந்திரன்(56). இவர்கள் இருவரும் சேர்ந்து கோவை மாவட்டம் காரமடையில் பாலித்தீன் சாக்குப்பை தயாரிக்கும் நிறுவனம் தொடங்கினார்கள்.

இந்த நிறுவனத்தின் தேவைக்காக இருவரும் திருப்பூர் கொங்குநகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.1 கோடி கடன் கேட்டனர்.

இதற்காக ஈரோட்டில் தங்கள் பெயரில் உள்ள 1¼ ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தின் ஆவணங்களை வங்கியில் அடமானமாக வைத்து கடந்த 2008-ம் ஆண்டு ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் பெற்றனர். அதன்பிறகு கடனுக்கான தவணைத்தொகையை உரிய முறையில் திருப்பி செலுத்தாமல் இருந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் கடன் தொகையை செலுத்தாததால் அவர்களுடைய நிலத்தை ஜப்தி செய்து ஏலம் விடுவதற்கான நடவடிக்கையில் வங்கி அதிகாரிகள் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று வங்கி அதிகாரிகள் பார்த்தபோது, அந்த ஆவணங்களில் குறிப்பிட்டபடி அங்கு நிலம் எதுவும் இல்லை. இதனால் வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். செந்தில், ரவிச்சந்திரன் இருவரும் வங்கியில் அடமானம் வைத்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என்பதும், இருவரும் திட்டமிட்டே போலி ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து வங்கியின் உதவி பொது மேலாளர் ஜெகத்ரட்சகன் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல், போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட செந்தில், அவருடைய தம்பி ரவிச்சந்திரன் ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு கைது செய்தனர். பின்னர் அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
Tags:    

Similar News