செய்திகள்

கம்பம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானையின் தந்தத்தை வெட்டி கடத்தியவர்கள் கைது

Published On 2018-12-12 05:30 GMT   |   Update On 2018-12-12 05:30 GMT
கம்பம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானையின் தந்தத்தை வெட்டி திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கூடலூர்:

தேனி மாவட்டம் கம்பம் பகுதியிலிருந்து கேரளாவிற்கு யானை தந்தங்கள் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. தமிழக தென்மண்டல முதன்மை வன பாதுகாவலர் தொபாசிஜானா, மேகமலை வனஉயிரினகாப்பாளர் கலாநிதி ஆகியோர் கேரளாவிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது பெரியார் புலிகள் காப்பகத்தை சேர்ந்த வனத்துறையினர் யானை தந்தங்களை விற்பனை செய்ததாக 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்த கங்கா, பிரபு என தெரியவந்தது.

சுருளிஆறு, மின்நிலையம் அருகே வண்ணாத்திபாறை, காப்புக்காடு, உடுப்பிஆறு வனப்பகுதியில் இறந்துகிடந்த யானையின் தந்தங்களை வெட்டி எடுத்து வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் 2 பேரையும் கைது செய்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு 25 வயது மதிக்கத்தக்க ஆண்யானை உயரழுத்த மின்கம்பியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்ததும் அவற்றின் தந்தங்கள் வெட்டி கடத்தப்பட்டதும் தெரியவந்தது.

யானை இறந்து 5 நாட்களுக்கு மேல் இருக்கலாம். உடலை பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர். தொடர்ந்து இப்பகுதியில் யானைகள் மின்சாரம் தாக்கி பலியாவது வனஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கங்கா, பிரபு ஆகியோர் யானை தந்தத்தை எங்கு கடத்த முயன்றனர் என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News