செய்திகள்

மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தை கிடையாது- கர்நாடக அமைச்சருக்கு சி.வி.சண்முகம் பதில்

Published On 2018-12-10 08:25 GMT   |   Update On 2018-12-10 08:25 GMT
மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை கிடையாது என அம்மாநில அமைச்சருக்கு தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். #MekedatuIssue #CVShanmugam
சென்னை:

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி இதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கி உள்ளது. தற்போது மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்ததையடுத்து, இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மேகதாது விவகாரம் தொடர்பாக பேசி தீர்வு காண வேண்டும் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார், தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார். ஆனால், கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழக அரசு தயாராக இல்லை.



இந்நிலையில், கர்நாடக அமைச்சரின் கடிதத்திற்கு தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மீறி உள்ளதால் கர்நாடகாவுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் கிடையாது என கூறியுள்ளார்.

“தமிழக அரசின் ஒப்புதல் இன்றி காவிரிபடுகையில் கர்நாடக அரசு எந்த அணையையும் கட்டக்கூடாது. ஆனால், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கர்நாடகம் மீறி உள்ளது. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமதப்படுத்தவே கர்நாடக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து கர்நாடக அரசு செயல்பட வேண்டும்” என சி.வி.சண்முகம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். #MekedatuIssue #CVShanmugam
Tags:    

Similar News