செய்திகள்

திண்டிவனத்தில் போலீசாரிடம் இருந்து தப்பி செல்ல முயன்ற கைதி விபத்தில் சிக்கி பலி

Published On 2018-12-08 14:05 GMT   |   Update On 2018-12-08 14:05 GMT
திண்டிவனத்தில் போலீஸ் பிடியில் இருந்து தப்பி செல்ல முயன்ற கைதி விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டிவனம்:

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியை சேர்ந்தவர் சிவஞானம். இவர் ஒரு குற்றவழக்கில் தர்மபுரி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவரை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்துவதற்காக இன்று காலை தர்மபுரி போலீசார் ஒரு வேனில் குற்றவாளி சிவஞானத்தை அழைத்து கொண்டு செங்கல்பட்டு நோக்கி புறப்பட்டனர். அந்த வேன் இன்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

அப்போது கைதி சிவஞானம் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என போலீசாரிடம் கூறினார். இதையடுத்து போலீசார் வேனை நிறுத்தி அருகில் உள்ள ஓட்டலுக்கு சிவஞானத்தை அழைத்து சென்றனர். அப்போது கைதி சிவஞானம் போலீசார் பிடியில் இருந்து தப்பிஓடினார். உடனே சிவஞானத்தை போலீசார் துரத்தி சென்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக சிவஞானத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவஞானம் பலத்த காயம் அடைந்தார்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிவஞானத்தை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிவஞானம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரோசனை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் பிடியில் இருந்து தப்பி செல்ல முயன்ற கைதி விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News