செய்திகள்

புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

Published On 2018-12-08 01:05 GMT   |   Update On 2018-12-08 01:05 GMT
கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டினார். #MinisterUdhayaKumar #GajaCyclone #GajaCycloneRelief
மதுரை:

மதுரை திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு ‘கஜா’ புயல் பாதித்த டெல்டா மாவட்ட மக்களுக்கு ரூ.1,400 கோடி வழங்கி உள்ளது. அத்துடன் 29 பொருட்கள் அடங்கிய பெட்டகமும் வழங்கியது. ஆனால் தற்போது வரை புயல் பாதிப்புக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை. தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையைத்தான் வழங்கி உள்ளது.

முதல்-அமைச்சர், அமைச்சர்கள் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று மக்களுக்கு ஆறுதல் கூறினர். ஆனால் ஸ்டாலின் ஒருநாள் சென்று பார்வையிட்டு புயல் நிவாரண பணிகள் குறித்து விமர்சனம் செய்கிறார்.



மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா சைக்கிள் கர்நாடக அரசால் நிராகரிக்கப்பட்டது என்று புரளி கிளப்புகின்றனர். கர்நாடக மாநில அரசு வழங்கும் சைக்கிள் வண்ணம் வேறு, தமிழக அரசு வழங்கும் சைக்கிள் வண்ணம் வேறு. தமிழக அரசு வழங்கும் சைக்கிள் தரமானது.

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஆகியவற்றை மீறும் வகையில் காவிரி படுகையில் மேகதாது அல்லது வேறு எந்த ஒரு இடத்திலும் தமிழ்நாட்டின் இசைவின்றி எந்த ஒரு கட்டுமான பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என தமிழக சட்டசபையில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. எனவே மேகதாது உள்பட காவிரி படுகையில் எந்த அணையும் கர்நாடகம் கட்ட முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.  #MinisterUdhayaKumar #GajaCyclone #GajaCycloneRelief
Tags:    

Similar News